பேங்காக்: சென்ற ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதியன்று இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர் இருவர் மாண்டது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் வெள்ளிக்கிழமையன்று (மே 17) வருத்தம் தெரிவித்தார்.
மாண்ட தாய்லாந்து ஆடவர்கள் இருவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரியப்படுத்திவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (மே 16) கூறியது. கடத்தப்பட்ட அவ்விருவரும் தாய்லாந்து நாட்டவர் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் காஸாவில் உயிருடன் இருந்ததாக நம்பப்பட்டது.
தற்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அறுவர் காஸாவில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இது, இஸ்ரேல் அளித்த புள்ளி விவரங்களைக் கொண்டு ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலாகும்.
“காஸாவில் பிணைக்கைதிகளாக இருந்த திரு சொந்தாயா ஓவாக்கராஸ்ரீ, திரு சிதிசாக் ரிந்தாலாக் இருவரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது,” என்று திரு ஸ்ரெத்தா எக்ஸ் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
“இருவரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
“எஞ்சிய பிணைக்கைதிகளை மீட்க தாய்லாந்து அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் செய்யும்.”
மாண்ட தாய்லாந்து ஆடவர்கள் இருவரும் பீரி கிபுட்ஸ் பகுதிக்கு அருகே உள்ள தோட்டங்களில் வேளாண் துறையில் வேலை செய்துவந்ததாக இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று குறிப்பிட்டது. அக்டோபர் ஏழாம் தேதியன்று பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஆக அதிகம் பாதிக்கப்பட்டோரில் பீரி கிபுட்ஸ் சமூகத்தினரும் அடங்குவர்.
மாண்ட தாய்லாந்து ஆடவர்கள் இருவரின் உடல்களை ஹமாஸ் அமைப்பு பிணைபிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவத்தின் பேச்சாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேலில் சுமார் 30,000 தாய்லாந்து நாட்டவர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வேளாண் துறையில் பணியாற்றுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தில் அத்துறையில் வழங்கப்படுவதைவிட இஸ்ரேலில் அவர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

