தைப்பே: தைவானின் புதிய அதிபராக திரு லாய் சிங் டெ பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று (மே 21) நாடாளுமன்றத்தில் தைவானிய அரசியல் தலைவர்கள் ஒருவர்மீது ஒருவர் கூச்சலிட்டுக்கொண்டனர். இந்நிகழ்வு, புதிய அதிபர் லாய் எதிர்கொள்ளக்கூடிய சவால்களைக் குறிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
திரு லாய் அதிபராகப் பதவியேற்ற மறுநாள் தைவானிய நாடாளுமன்றத்தில் இவ்வாறு நிகழ்ந்தது. இரு தரப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் ஆர்ப்பாட்டம் செய்து வெளிப்படையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சீனாவுடன் ஓரளவு நட்பாக இருக்கும் கேஎம்டி கட்சியும் தைவான் மக்கள் கட்சியும் (டிபிபி) உள்ள கூட்டணியை திரு லாயின் ஜனநாயக முன்னேற்றக் கட்சி எதிர்நோக்குகிறது. அக்கூட்டணி, ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன் அதிகம் ஒத்துப்போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அதிகாரத்தை விரிவுபடுத்த எதிர்க்கட்சிக் கூட்டணி சில மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிக் கூட்டணி சரியான முறையில் அவற்றை முன்வைக்கவில்லை என்பது ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வாதமாகும்.

