சோல்: சீனப் பிரதமர் லி சியாங் மே 26ஆம் தேதி, தென்கொரியத் தலைநகர் சோல் சென்றடைந்துள்ளார்.
தென்கொரிய, ஜப்பானியத் தலைவர்களுடன் முத்தரப்பு உச்சநிலைச் சந்திப்பில் அவர் கலந்துகொள்வார்.
நாலாண்டுக்குப் பிறகு இத்தகைய முத்தரப்பு உச்சநிலைச் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.
முன்னதாக 2008ஆம் ஆண்டு, வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒவ்வோர் ஆண்டும் உச்சநிலை மாநாட்டை நடத்த அவை ஒப்புக்கொண்டன.
ஆனால், இருதரப்புகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிவரும் பகை, கொவிட்-19 கிருமிப்பரவல் போன்ற காரணங்களால் 2019க்குப் பிறகு அது தடைபட்டது.
பொருளியல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், மக்களுக்கு இடையிலான பரிமாற்றம், சுகாதாரம், மூப்படையும் மக்கள்தொகை போன்ற அம்சங்கள் தொடர்பில், தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிதா, திரு லி மூவரும் இணக்கம் காண்பர் என்று சோல் அதிகாரிகள் கூறினர்.
அதிபர் யூன் மே 26ஆம் தேதி, சீனப் பிரதமருடனும் ஜப்பானியப் பிரதமருடனும் தனிப்பட்ட இருதரப்புப் பேச்சுகளையும் நடத்துவார் என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானியப் பிரதமர் கிஷிதாவும் சீனப் பிரதமர் லியைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பார். ஜப்பானியக் கடலுணவு இறக்குமதிக்குச் சீனா விதித்துள்ள தடை குறித்தும் தைவான் குறித்தும் அவர்கள் கலந்துரையாடுவர் என்று ஜப்பானிய அரசாங்கத் தகவல்களை மேற்கோள்காட்டி என்எச்கே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பின்னர் மே 27ஆம் தேதி, தலைவர்கள் முத்தரப்புச் சந்திப்பில் கலந்துகொள்வர்.
சர்ச்சைக்குரிய விவகாரங்களில் முக்கிய மாற்றம் ஏற்படாவிட்டாலும் மக்களுக்கு இடையிலான பரிமாற்றம், தூதரக விவகாரங்களில் ஒத்துழைப்பது போன்ற துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என்று அதிகாரிகளும் அரசதந்திரிகளும் கருதுகின்றனர்.