ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை காணச் சென்றிருந்த பெண்மணியின் செயல் பார்ப்போர் மனதை நெகிழவைத்துள்ளது.
தமது குடும்ப உறுப்பினரின் படுக்கைக்குப் பக்கத்துப் படுக்கையில் இருந்த நோயாளி, சொந்தமாக உணவு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்ததை அஞ்சலா தேவி, 63, கவனித்தார்.
அடுத்த கணமே, அந்தத் தாயுள்ளம் அந்த இளம் ஆடவருக்கு உதவிக்கரம் நீட்டியது.
முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நோயாளியின் படுக்கையில் அமர்ந்து அவருக்கு உணவூட்டினார் திருவாட்டி அஞ்சலா தேவி.
இதைக் காட்டும் காணொளி ஜூன் 7ஆம் தேதி டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
“அந்த இளம் ஆடவர் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். என் குடும்பம் அவருக்கு உதவியது,” என்ற வாசகத்துடன் அந்தக் காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளும் முக்கியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருவாட்டி அஞ்சலா தேவி ஊட்டிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டே அந்த இளம் மலாய் ஆடவர், தமது கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைப்பதை அந்த 26 வினாடிக் காணொளி காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் காணொளியைப் பார்த்த பலர், மனம் நெகிழ்ந்து திருவாட்டி அஞ்சலா தேவியின் அன்புள்ளத்தைப் பாராட்டினர். அந்த ஆடவரைப் பார்த்து பலர் பரிதாபப்பட்டு கருத்து பதிவிட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இதே போன்ற முன்பின் அறிமுகமில்லாதோரிடமிருந்து உதவி கிடைத்தது பற்றி பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இனம், சமயம் ஆகியவற்றைக் கடந்து ஒரு தாயின் உள்ளம் அதற்கும் அப்பாற்பட்ட நிலையில் இருப்பதாக டிக்டோக் பயனாளரான @அருள்வரன்10 தெரிவித்தார்.
இந்தக் காணொளி ஃபேஸ்புக்கில் காட்டுத் தீயைப் போல பரவியது.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமது உறவினரைக் காண மருத்துவமனைக்குச் சென்றதாக திருவாட்டி அஞ்சலா தேவி கூறியனார்.
அந்த இளம் ஆடவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக திருவாட்டி அஞ்சலா தேவி தெரிவித்தார். இதனால் சொந்தமாகச் சாப்பிட அவர் சிரமப்பட்டதாக அவர் கூறினார்.
“ஒருவர் அவதிப்படும்போது அதைக் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. அவருக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி அஞ்சலா தேவி.

