ஹனோய்: பிலிப்பீன்ஸ் தனது உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, வியட்னாமுடனான அரிசி வர்த்தக ஒப்பந்தத்தை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரயிறுதி வியட்னாமுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட பிலிப்பீன்ஸ் விவசாயத்துறை அமைச்சர் ஃபிரான்சிஸ்கோ டியூ லோரல் இத்தகவலைத் தெரிவித்தார்.
அரிசி ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் வியட்னாம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அண்மைய ஆண்டுகளில் வியட்னாமிடமிருந்து அரிசி வாங்கும் நாடுகள் பட்டியலில் பிலிப்பீன்ஸ் முதலிடம் வகிக்கிறது.
இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வியட்னாம் ஏற்றுமதி செய்த அரிசியில் 45.4 விழுக்காடு பிலிப்பீன்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பீன்சின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 1.5 விழுக்காடு ஏற்றம் காண்கிறது. இதன் விளைவாக அரிசிக்கான தேவை அதிகரிக்கிறது. இத்தேவையை உள்ளூரில் விளையும் அரிசியால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, அரிசி இறக்குமதியை அதிகரிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்று அமைச்சர் லோரல் தெரிவித்தார்.
பிலிப்பீன்சில் முதலீடு செய்வது குறித்தும் வியட்னாமிய அரிசி நிறுவனங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜனவரி மாதம் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது அரிசி வர்த்தகம், விவசாய ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

