மிகக் கடுமையான முதுகு வலியால் அவதியுற்ற 69 வயது திருவாட்டி சுந்தரம்பிள்ளை இந்திராணிக்கு டான் டோக் செங் மருத்துவமனையில் மருத்துவரைக் காண கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டது.
ஆனால், ஐந்து மாதங்கள் கழித்துதான் அவரால் அங்கு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற முடியும். அதற்கு முன்னதாக மருத்துவரைக் காண்பதற்கான தேதிகள் கிடையாது. அவை அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.
இப்படி இருக்க, அவரது முதுகு வலி மோசமடைந்தது.
கடந்த ஏப்ரல் மாதம், புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை அவருடன் தொடர்புகொண்டது. அங்குள்ள மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற விரும்புகிறீர்களா என்று திருவாட்டி இந்திராணியிடம் அது கேட்டது.
ஜூன் மாதத் தொடக்கத்திலேயே மருத்துவரைப் பார்த்துவிடலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
“உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை ஒரு வரமாக அமைந்தது. டான் டோக் செங் மருத்துவமனையுடன் ஒப்பிடுகையில் நான் வசிக்கும் இடத்துக்கு அது அருகில் உள்ளது. அதுமட்டுமல்லாது, எனது முதுகு வலி மோசமடைந்துகொண்டிருந்தது. என்னால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் போனது,” என்றார் திருவாட்டி இந்திராணி.
அவர் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துவிட்டார். அத்துடன் அங்கு இரண்டு முறை இயன் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டார். தற்போது வலி குறைந்திருப்பதாக அவர் கூறினார்.
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை திறக்கப்பட்டதை அடுத்து, மருத்துவரைக் காண நோயாளிகளின் காத்திருப்பு நேரமும் மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளிச் சேவைப் பிரிவின் பணிச் சுமையும் குறைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கூ டெக் புவாட் மருத்துவமனை அல்லது டான் டோக் செங் மருத்துவமனையில் மருத்துவரைக் காண முன்பதிவு செய்திருந்த 1,300க்கும் அதிகமான நோயாளிகள் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு மாறியுள்ளனர்.
மே 2ஆம் தேதிக்கும் ஜூன் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனையின் அவசரப் பிரிவிலிருந்து ஏறத்தாழ 350 நோயாளிகள் உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் போக்குவரத்துச் சேவை மூலம் அவர்கள் இடமாற்றப்பட்டனர்.
ஒருநாளுக்குக் கிட்டத்தட்ட ஏழு நோயாளிகள் இடமாற்றப்பட்டனர்.
ஆனால் இந்த எண்ணிக்கை 18 வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கூ டெக் புவாட் மருத்துவமனையில் காலி படுக்கைகள் இல்லை என்றும் புதிய ஏற்பாட்டுக்குப் பிறகு அங்கு 10 விழுக்காடு படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருந்தோர் சிலர், வார்டில் படுக்கை கிடைக்க இரண்டு அல்லது அதற்கும் அதிகமான நாள்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனையுடன் சேர்த்து சி்ங்கப்பூரில் தற்போது ஒன்பது பொது மருத்துவமனைகள் உள்ளன.
பிடோக், தெங்கா ஆகிய வட்டாரங்களில் மேலும் இரண்டு பொது மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன.
புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனை 17 உட்லண்ட்ஸ் டிரைவ்வில் அமைந்துள்ளது. அங்கு 2,400 மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். அந்த மருத்துவமனையில் 460 படுக்கைகள் உள்ளன.
முழுமையாகத் திறக்கப்படும்போது மொத்தம் 1,400 நாட்பட்ட, சமூக, நீண்டகாலப் பராமரிப்பு படுக்கைகளை மருத்துவமனை கொண்டிருக்கும்.
தேவை ஏற்பட்டால் கூடுதலாக 400 படுக்கைகளைச் சேர்த்துக்கொள்ள இடமும் உள்ளது.