கோலாலம்பூர்: மலேசியாவில் இணையப் பகடிவதை காரணமாக அண்மையில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட அப்பெண்ணின் இயற்பெயர் ராஜேஸ்வரி அப்பாஹு.
சமூக ஊடகப் பிரபலமும் தன்னார்வலருமான 30 வயது ராஜேஸ்வரி ஜூலை 5ஆம் தேதியன்று தமது வீட்டில் மாண்டு கிடந்தார்.
அவரது மரணத்தை அடுத்து, 35 வயது பெண்ணும் 44 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.
தமது மகள் இறந்த பிறகும் சமூக ஊடகம் வாயிலாகச் சிலர் அவரை இழிவுபடுத்துவதாக ராஜேஸ்வரியின் தாயாரான 56 வயது திருவாட்டி புஷ்பா ராஜகோபால் சில நாள்களுக்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, மூவரிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த மூவரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியும் ஒருவர். அவர் ஒரு பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜேஸ்வரியின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவர் ஜூலை 16ஆம் தேதியன்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பிறருக்கு எரிச்சலூட்டும் நோக்குடன் ஜூன் மாதம் 30ஆம் தேதி இரவு 10.12 மணிக்கு டிக்டோக் வலைத்தளத்தில் ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதை லாரி ஓட்டுநரான பி. சதிஷ்குமார் ஒப்புக்கொண்டார்.
கோபத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்கும் நோக்குடன் ஜூலை 1ஆம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் டிக்டோக் வலைத்தளத்தில் வசைபாடிய குற்றத்தைத் தனியார் மனநலப் பராமரிப்பு தாதிமை இல்லத்தின் உரிமையாளரான 35 வயது ஷாலினி பெரியசாமி ஒப்புக்கொண்டார்.