பெய்ஜிங்: சீனாவின் சீசுவான் மாநிலத்தில் உள்ள கடைத்தொகுதியில் தீ மூண்டதை அடுத்து, 16 பேர் மாண்டனர்.
இத்தீச்சம்பவம் ஜூலை 17ஆம் தேதி நிகழ்ந்ததாக சீன ஊடகம் தெரிவித்தது.
சிகோங் நகரில் உள்ள அந்த 14 மாடிக் கட்டடத்தில் தீ மூண்டது. அதிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் காட்டும் படங்களும் காணொளிகளும் வெளியிடப்பட்டன.
கட்டடத்தில் சிக்கித் தவித்தோரைத் தேடி மீட்கும் பணிகள் சீன நேரப்படி ஜூலை 18ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏறத்தாழ 30 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சீன நேரப்படி ஜூலை 17ஆம் தேதி இரவு 8.20 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

