மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வீசிய ‘கேய்மி’ சூறாவளி அந்நகரையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.
கனமழையைத் தொடர்ந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அந்நகரம் தள்ளாடுகிறது. சாலைகள் மூழ்கிக் கிடக்கின்றன. பள்ளிகள், மருத்துவமனைகளில் மார்பு அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக் கானவர்கள் மாற்று இடங்களைத் தேடி ஓடியிருக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட, உள்ளூர் ஊடகங்களில் வெளியான படங்கள், சாலைகளில் போர்வைபோல வெள்ளம் போர்த்தியிருப்பதைக் காட்டுகின்றன. பெரும்பாலான வாகனங்களால் நகர முடியாமல் சாலைகளில் அவை முடங்கிக் கிடக்கின்றன.
பெருநகரமான மணிலாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மணிலா 16 நகரங்களை உள்ளடக்கியதாகும்.
மக்கள், கனமழையில் உடைந்த குடைகளை பிடிக்கப் போராடுவதையும் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தின் கூரையில் பலர் தஞ்சமடைந்துள்ளதையும் படங்கள் காட்டுகின்றன.
இந்த நிலையில் ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால் ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டின் கூரையிலும் இரண்டாவது மாடியிலும் தவிப்பதாக சில குடியிருப்பாளர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
‘பிலிப்பீன்ஸ் டெய்லி இன்கியூரர்’ பதிவிட்ட காணொளி ஒன்றில் மணிலாவின் தெற்கில் உள்ள மேகாயன் சாலையில் ஒரு சிறிய கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் மணிலாவுக்குத் தெற்கே பட்டான்காஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கர்ப்பிணி பெண், மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து கனமழையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12க்கு அதிகரித்துள்ளது.
மெட்ரோ மணிலாவின் மலபோன் நகர மேயரான ஜீனி சாண்டோவல், நகரத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதாகக் கூறியுள்ளார்.
மணிலா புறநகர பேரிடர் அதிகாரியான பீச்சி டி லியோன், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் இருப்பதால் மீட்பாளர்கள் நகரம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஏராளமான மக்கள் உதவி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“முந்தைய நாள் இரவு மழை வராது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென மழை பெய்தது அதிர்ச்சியாக இருந்தது. தேடுதல், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.
வடக்கு பிலிப்பீன்ஸ் பகுதிகளைத் தாக்கிய ‘கேய்மி’ சூறாவளி தைவானை நோக்கி நகர்ந்து செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் நிலை பிரகடனம்
இந்நிலையில், மெட்ரோ மணிலாவில் புதன்கிழமை (ஜூலை 24) பேரிடர் நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சூறாவளிக்குப் பிந்திய மீட்புப் பணிகளுக்குரிய அவசர உதவி நிதியை அரசாங்கம் பயன்படுத்த அந்தப் பிரகடனம் அனுமதிக்கிறது.
சூறாவளி காரணமாக, மணிலாவின் முக்கிய விமான நிலையத்தின் ஒன்பது அனைத்துலக விமானச் சேவைகளும் 71 உள்ளூர் விமானச் சேவைகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகள் மாற்று பயணத்துக்குப் பதிவு செய்ய நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

