பேங்காக்: தாய்லாந்தில் பெரும்பாலான மக்களுக்கு 10,000 பாட் (376 வெள்ளி) உதவித்தொகை வழங்க வகைசெய்யும் திட்டத்தில் புதன்கிழமையன்று (ஜூலை 31) இடையூறுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடங்கிய முதல் நாளில் உதவித்தொகையைப் பெற மில்லியன் கணக்கானோர் விண்ணப்பித்தனர். அதனைத் தொடர்ந்து விண்ணப்பம் செய்வதற்கான தளத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.
பிற்பகல் வேளை தொடங்குவதற்குள் 10.5 மில்லியன் பேர் திட்டத்தில் சேர விண்ணப்பித்தனர். ஆனால், மேலும் பல மில்லியன் பேரால் விண்ணப்பத் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை.
விண்ணப்பம் செய்வதற்கான மறைச்சொற்களைக் கொண்ட குறுந்தகவல்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பலர் தெரிவித்தனர்.
குடும்பங்களுக்கு இருக்கும் அதிகக் கடன் சுமை, மக்கள் அதிகம் செலவு செய்யாமல் இருப்பது ஆகிய காரணங்களால் தாய்லாந்து பொருளியல் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறது. அதனால் 500 மில்லியன் பாட் (19 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான மின்னிலக்கப் பணப்பைத் திட்டம் பொருளியலுக்கு மெருகூட்டும் என்று தாய்லாந்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
எனினும், எங்கிருந்து உதவித்தொகை வரும் என்பதன் தொடர்பில் ஐயங்கள் இருந்ததால் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பிரபல பொருளியல் வல்லுநர்கள், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளிட்ட கவனிப்பாளர்கள் திட்டத்தைக் குறைகூறியுள்ளனர். திட்டம் குறுகிய காலத்தைக் கருத்தில்கொண்டே வரையப்பட்டது என்பதும் நிதி நிலவரத்தைப் பொறுத்தவரை அது பிரச்சினைகளுக்கு வழிவிடக்கூடியது என்பதும் அவர்களின் கருத்து.
அத்தகைய குற்றச்சாட்டுகளை தாய்லாந்து அரசாங்கம் மறுத்து வந்துள்ளது.
“முதல் நாளில் பிரச்சினைகள் இருப்பது இயல்புதான். ஆனால் எங்களால் முடிந்தவரை நாங்கள் சரிசெய்ய முயற்சி செய்கிறோம்,” என்று தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் கூறினார். அவர், உதவித்தொகைத் திட்டத்தின் மீது ஆக அதிக நம்பிக்கை கொண்டவர் ஆவார்.

