மணிலா: பிலிப்பீன்சை மன்-யீ (Man-yi) சூறாவளி கடுமையாக அச்சுறுத்தியுள்ளது.
சூறாவளியால் பெரும் பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்-யீ வலுவடைந்து கடுமையான புயலாக மாறியுள்ளது.
இதனால் பிலிப்பீன்சில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இயற்கை பேரிடர்களால் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சூறாவளி தாக்கும் போது நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூறாவளியில் இருந்து தப்பிக்க 255,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மன்-யீ சூறாவளி மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அது கேட்டன்டுவென்ஸ் பகுதியில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.மேலும் அப்பகுதியில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட்டன்டுவென்ஸ் பகுதியில் குறைந்த அளவிலேயே மக்கள் உள்ளனர் என்பதால் அதிகாரிகள் வேகமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து கடுமையான சூறாவளிகளை எதிர்கொண்ட பிலிப்பீன்ஸ் தற்போது ஆறாவது சூறாவளியை சமாளித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
சூறாவளிகளால் குறைந்தது 163 பேர் மாண்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.