அமெரிக்க வரியால் ஆசியா பக்கம் திரும்பும் சுவிட்சர்லாந்து

2 mins read
315cb1b4-e248-4039-899b-0c70551cd7e0
சுவிட்சர்லாந்தில் 550 ஊழியர்களைக் கொண்ட நெட்ஸ்டால் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவின் 39 விழுக்காட்டு வரியால் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்தன. - படம்: நெட்ஸ்டால்

சூரிக்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த 39 விழுக்காட்டு வரிகளால் சுவிட்சர்லாந்து வர்த்தகங்களின் கவனம் சிங்கப்பூர் பக்கமும் இதர ஆசிய நாடுகளின் பக்கமும் திரும்பியுள்ளது.

“அமெரிக்காவின் 39 விழுக்காட்டு வரி தொடர்ந்தால் அமெரிக்கச் சந்தைமீது சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு சிங்கப்பூர், இந்தியா, பேங்காக் போன்ற ஆசிய நாடுகளில் வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் வரும்,” என்றார் 550 ஊழியர்களைக் கொண்டிருக்கும் நெட்ஸ்டால் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ரென்ஸோ டவாட்ஸ்.

உற்பத்தியில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டை, அதாவது 25 மில்லியன் ஃபிரேங்க் (சுவிஸ் நாணயம்) மதிப்புள்ள பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நெட்ஸ்டால் போன்ற நிறுவனங்கள் திரு டிரம்ப்பின் புதிய வரிகளால் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாம் ஆகப் பெரிய வெளிநாட்டுச் சந்தையை சுவிட்சர்லாந்து கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கான சுவிட்சர்லாந்தின் மொத்த ஏற்றுமதி 18.6 விழுக்காடு.

ஏப்ரலில் திரு டிரம்ப் 31 விழுக்காட்டு வரியை விதிக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தாலும் சுவிட்சர்லாந்து அந்த விகிதம் 10 விழுக்காட்டுக்குக் குறையும் என்று எதிர்பார்த்தது.

“ஆனால் 39 விழுக்காடு வரி எதிர்பார்த்ததைவிட மோசமாக அமைந்துவிட்டது,” என்றார் லிண்ட், ஸ்புருங்லி ஆகிய சாக்லெட் உற்பத்தி நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் சங்கத்தின் இயக்குநர் ரோஜர் வேர்லி.

அமெரிக்காவின் வரிகள் தொடர்ந்தால் சுவிட்சர்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 விழுக்காடு வரை குறையக்கூடும் என்றும் 7,500லிருந்து 15,000 பேர் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர்.

இன்னும் விரிவான வேலையின்மை பாதுகாப்பை வலுப்படுத்தும்படி அரசாங்கத்தைக் கேட்ட நிபுணர்கள், அமெரிக்கச் சந்தையைவிட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறிவிடும்படி பரிந்துரைத்தனர்.

சந்தையில் வலுவில்லாத சில நிறுவனங்கள் இறுதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும் அல்லது முற்றாக நிறுத்தவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்