தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் விவகாரம்: நெருப்புடன் விளையாடுவதாக பிலிப்பீன்சைக் குறைகூறுகிறது சீனா

2 mins read
b082d4dc-d2c3-46fa-9bba-2f832a96c32b
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் மக்களவையில் நான்காம் முறையாக நாட்டு உரையை ஜூலை 28ஆம் தேதி நிகழ்த்தினார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: தைவானிய விவகாரத்தில் பிலிப்பீன்ஸ் நெருப்புடன் விளையாடுவதாகச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சச்சரவு எழுந்தால் தமது நாடு தலையிட நேரிடலாம் என்று கூறியிருந்தார். அதற்குச் சீனா பதிலளித்துள்ளது.

திரு. மார்கோஸ் இந்தியப் பயணத்தின்போது அந்தக் கருத்தை முன்வைத்திருந்தார். தைவானுடன் பிலிப்பீன்சுக்கு நெருக்கமான உறவுள்ளது. தைவானில் ஏராளமான பிலிப்பினோக்கள் வசிக்கின்றனர். அதனால் ஏதேனும் பூசல் மூளும் நிலையில் தமது நாடு அதில் ஈடுபடவேண்டிய தேவை ஏற்படக்கூடும் என்று திரு மார்கோஸ் குறிப்பிட்டிருந்தார்.

“புவியியல் ரீதியாக நெருக்கமாக இருப்பதையோ வெளிநாடுகளில் தங்களின் குடிமக்கள் அதிகமானோர் வசிக்கின்றனர் என்பதையோ ஒரு நாடு மற்ற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்குக் காரணமாகக் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தது.

“ஒரே சீனா” கொள்கையை மதித்து நடக்கும்படி பிலிப்பீன்சை அது கேட்டுக்கொண்டது. சீனாவின் அடிப்படை நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் தலையிடுவது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது என்று அறிக்கை சுட்டியது. எனவே அதைத் தவிர்க்கும்படி அமைச்சு பிலிப்பீன்சிடம் வலியுறுத்தியது.

தென்சீனக் கடற்பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்சினைகளின் தொடர்பில் பெய்ஜிங்கிற்கும் மணிலாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் திரு மார்கோஸ் தைவானிய விவகாரம் பற்றிப் பேசியிருந்தார்.

சீனா, தைவானை அதன் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால் தைவானோ அதனை ஏற்க மறுக்கிறது.

சீனாவின் அண்மைக் குற்றச்சாட்டுக்குப் பெய்ஜிங்கில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் உடனடியாகக் கருத்துக் கூறவில்லை.

குறிப்புச் சொற்கள்