தைவான் சீனாவுடன் இணைவது வரலாற்றுப்பூர்வமானது: அதிபர் ஸி

தைவான் சீனாவுடன் இணைவது வரலாற்றுப்பூர்வமானது: அதிபர் ஸி

படம்: இபிஏ

12 Nov 2026 - 6:54 pm

2 mins read

பெய்ஜிங்: வரலாற்றின் பேரலையை தடுக்கமுடியாது, அதைப்போல சீனாவுடன் தைவான் இணைவதை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று அதிபர் ஸி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.

அதோடு தாய்நாட்டுடன் தைவான் சேர்க்கப்படுவது அமைதியாக நடக்கும் என்றும் அவர் வியாழக்கிழமை (நவம்பர் 12) தெரிவித்தார். அதற்கு ராணுவ வலிமை பயன்படுத்தப்படுமா என்பதை அவர் விளக்கவில்லை.

தைவான் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் அதனை தமது சொந்த மாநிலமாகக் கருதும் சீனா ‘ஒரே நாடு, இருவகை ஆட்சிமுறை’ என்ற திட்டத்தை அடிக்கடி பறைசாற்றிவருகிறது. அதன்படி, தைவானை அதன் ஒருங்கிணைந்த ஆட்சியின்கீழ் இயங்கவைக்க முடியும் என்ற எதிர்ப்பார்ப்பில் சீனா செயல்பட்டாலும் அதனை தைவானின் எந்த எதிர்க்கட்சியும் ஆதரிக்கவில்லை.

தைவானின் நிலைப்பாட்டை சரிசெய்வது என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளராத வரலாற்று இலக்காக உள்ளது’ என்று பெய்ஜிங்கின் மக்கள் மாமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ஸி கோடிட்டுக் காட்டினார்.

“வரலாற்று பேரலையை தடுத்து நிறுத்த முடியாது, தாய்நாட்டுடனான முழு ஒருங்கிணைப்பு அவசியமாக நிறைவேற்றப்படவேண்டும், அது நிச்சயம் நிறைவேறும்,” என்று அவர் மாமன்றத்தில் சூளுரைத்தார்.

சீனாவில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர் சன் யாட் சென்னின் 160 பிறந்தநாளை நினைவுகூறும் நிகழ்வில் அதிபர் ஸி பேசினார். அப்புரட்சித் தலைவர் 1911ல் அரச, அரசிகளின் வம்சாவளியினர் நடத்திய ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, சீனக் குடியரசு பிறந்தது.

பேச்சுவார்த்தைகள் வழியாக இருநாட்டு உறவை மேம்படுத்தவும் சுதந்திரத்தை நாடும் பிளவுவாத சக்திகளுக்கு எதிராக சீனாவுடன் இணைந்து செயல்படவும் அவர் தைவான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்