ஒட்டாவா: கனடாவில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அந்நாட்டு அடையாள, பண்பாட்டு, அதிகாரத்துவ மொழிகள் துறை அமைச்சர் மார்க் மில்லர் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் மரபுடைமை மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, நாடு முழுதுமுள்ள தமிழ்ச் சமூகத்தினர்க்குக் கனடா மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஆசியாவிற்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகக் கனடா திகழ்கிறது. 1983 முதலே வன்முறையாலும் நிலையற்ற தன்மையாலும் தஞ்சம் புகும் சமூகத்தினரைக் கனடா வரவேற்று வருகிறது.
“தங்களது மீள்திறன், மனவுறுதி, கடப்பாடு ஆகியவற்றால் கனடியத் தமிழ் மக்கள் துடிப்பான சமூகங்களைக் கட்டமைக்கவும் நாட்டின் வண்ணமயப் பண்பாட்டை வலுப்படுத்தவும் உதவி வருகின்றனர்.
“கலை, கல்வி, தொழில்முனைப்பு, அறிவியல் போன்ற பல துறைகளில் தமிழ்ச் சமூகம் பெரும்பங்காற்றி வருகிறது. இன்றும் பேசப்பட்டுவரும் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்கிறது. வாழும் மரபான தமிழ் மரபு, அறிவு, பாரம்பரியம் மற்றும் புத்தாக்கச் செழுமைமிக்கது. அது நம் தேசிய மரபுடைமையைத் தொடர்ந்து செழுமைப்படுத்தியும் நமது ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கு வடிவம் தந்தும் வருகிறது.
“ஜனவரி முழுவதும், நாடு முழுதுமுள்ள தமிழ்ச் சமூகங்களின் பன்முகத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அறியும்படி கனடியர் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கிறேன்.
“கனடாவிலும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு மில்லர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ் மொழி மாதமாகக் கொண்டாடப்பட்டு வருவதைப் போன்று, கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் ஜனவரி மாதம் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

