வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் சீனாவிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் உடன்பாடு எட்டப்பட்டால் வரிகள் குறையக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
சீனாமீதான வரிகள் கணிசமாகக் குறைந்தாலும் அது பூஜ்ஜியமாகாது என்று (ஏப்ரல் 22) திரு டிரம்ப் சொன்னார்.
“நாங்கள் நல்லவிதமாக நடந்துகொள்வோம், அவர்களும் நல்லவிதமாக நடந்துகொள்வார்கள். அதன்பின் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்ற திரு டிரம்ப், சீன அதிபர் சி சின்பிங்குடனான கலந்துரையாடலின்போது கொவிட்-19 பற்றி பேசப்போவதில்லை என்றார்.
சீனாவில் உள்ள ஆய்வுக்கூடம் ஒன்றிலிருந்து கொவிட்-19 கிருமி பரவியதாகக் கூறும் இணையத்தளத்தை வெள்ளை மாளிகை அண்மையில் அறிமுகம் செய்தது. அது சீனாவின் அரசதந்திரிகளை முகம் சுளிக்க வைத்தது.
ஏப்ரல் 2ஆம் தேதி திரு டிரம்ப் புதிய வரிகளை அறிவித்ததிலிருந்து அமெரிக்காவின் பங்குகளும் கருவூலங்களும் ஆட்டங்கண்டன. அதை பின் 90 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக அவர் தெரிவித்தார்.
சீன இறக்குமதிகள்மீது திரு டிரம்ப் இவ்வாண்டு விதித்த 145 விழுக்காட்டு வரிகள் நடப்பில் உள்ளன. இருப்பினும் கணினிகளுக்கும் பிரபல பயனீட்டாளர் மின்பொருள்களுக்கும் மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்கா கலந்துரையாடல், சமரசப்பேச்சு ஆகியவை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்பினால் அச்சுறுத்துவதையும் மிரட்டுவதையும் நிறுத்தவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாக்குன் சொன்னார்.
சமத்துவம், மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்கா சீனாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா, சீனாவுடன் உடன்பாட்டை எட்ட விரும்புவதாகக் கூறினாலும் அது தொடர்ச்சியாக உச்சக்கட்ட நெருக்கடியைத் தருகிறது என்ற திரு குவோ, அது சரியல்ல என்றார்.
அமெரிக்கா பேச விரும்பினால் சீனாவின் கதவுகள் திறந்திருக்கின்றன; மாறாக அது போராட விரும்பினால் இறுதிவரை போராடவும் தயார் என்று சீனா சூளுரைத்தது.

