அமெரிக்க வரிவிதிப்பு: சீனா, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை

1 mins read
af56a849-96bb-4fa1-a2d3-2a5c6c054d48
சீன வர்த்தக அமைச்சர் வாங் வெந்தாவ். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: அமெரிக்கா, உலக நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது வரிவிதித்திருப்பதைத் தொடர்ந்து சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களுக்கிடையிலான பொருளியல், வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளன.

சீனாவின் வர்த்தக அமைச்சு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) இத்தகவலை வெளியிட்டதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது. வர்த்தகச் சலுகைகள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது, மின்சார வாகன விலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீன வர்த்தக அமைச்சர் வாங் வெந்தாவ், ஐரோப்பிய வர்த்தக, பொருளியல் பாதுகாப்பு ஆணையர் மார்க்கோஸ் செவ்கொவிச்சுடன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) காணொளிவழி பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன வர்த்தக அமைச்சு அறிக்கை மூலம் குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனா மீது விதித்த கூடுதல் வரி நடப்புக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக, முதலீட்டு, தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக இருக்கிறது என்று திரு வாங், செவ்கொவிச்சிடம் கூறினார்.

விதிமுறைகளை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பலதரப்பு வர்த்தக முறையை இணைந்து பாதுகாக்குமாறும் நீக்குப்போக்குடன் இருந்துவரும் வர்த்தகச் சூழலுக்கு இணங்கி நடந்துகொள்ளுமாறும் திரு வாங், சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் குரல் கொடுத்தார். அதன்மூலம் உலகப் பொருளியலுக்கும் உலக வர்த்தகத்துக்கும் கூடுதல் நிலைத்தன்மையைக் கொண்டுவரமுடியும் என்று அவர் சொன்னதாக சீன வர்த்தக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்