வாஷிங்டன்: அமெரிக்காவின் இடைத் தவணைத் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், தமது நிர்வாகம் கொண்டுவந்த விரிவான வரிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரிகளால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதாகத் தேர்தல் களத்தில் அமெரிக்க மக்கள் வெளிப்படையாகத் தெரிவித்த நிலையிலும் அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.
“அதிக வரிகளைத் தவிர்ப்பதற்காக மற்ற நாடுகள் அமெரிக்காவில் முதலீடு செய்து வருகின்றன. வரிகளை நீக்கினால், அந்த நாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடையும். உடனடியாக அமெரிக்காவில் அதன் கட்டமைப்புப் பணிகளை நிறுத்திவிடும்,” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் கூறினார்.
“வரி குறைக்கப்பட்டால் சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வரும் பொருள்கள் அமெரிக்காவில் குவியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த இடைத் தவணைத் தேர்தலில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் கைப்பற்றினர்.
ஜனவரியில் நாடாளுமன்றம் கூடியதும் வரிகளை ரத்து செய்ய நிர்வாகத்தை வலியுறுத்த உள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் நிறைவேற்றும் எந்தவொரு மசோதாவையும் ரத்து செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் அதிபர் டிரம்ப்பிடம் உள்ளது.
சீனா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 60 வர்த்தகப் பங்காளிகளிடம் இருந்து வரும் பொருள்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 12.5 விழுக்காடு வரை வரி விதித்துள்ளது.
வாகனங்கள், எஃகுப் பொருள்கள் உள்ளிட்ட இறக்குமதிகளுக்குத் தனித்தனித் துறைசார் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
