தொழில்நுட்பத் துணுக்குகள் [29/10/2026]

தொழில்நுட்பத் துணுக்குகள் [29/10/2026]

1 of 2
படம்: பெட்ராக் ரோபோட்டிக்ஸ்
படம்: கூகல் குரோம்

29 Oct 2026 - 7:00 am

2 mins read

என்விடியா, மெட்டா முதலீட்டுத் திட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் தங்களின் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், என்விடியா, மெட்டா நிறுவனங்கள் புதிதாக 3 பில்லியன் டாலர் முதலீட்டு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது அதிநவீன ‘ஏஐ’ உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதை இது உணர்த்துகிறது.

கூகல் குரோமில் ‘கிளிக்ஃபிக்ஸ்’

பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கூகல் குரோம் புதிய ‘கிளிக்ஃபிக்ஸ்’ எச்சரிக்கை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் தங்களை அறியாமலேயே தீங்குநிரல் கட்டளைகளைச் செயல்படுத்துவதைக் கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் வகையில் இந்த அம்சம் கூகல் குரோமில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எச்சிஎல்-ராபிடஸ் புதிய கூட்டணி

ஜப்பானியச் சில்லுத் தயாரிப்பு நிறுவனமான ராபிடஸ், இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் (HCL Technologies) இரண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.

அடுத்த தலைமுறை பகுதி மின்கடத்திகளின் பொறியியல், உற்பத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவில் கூட்டு மேம்பாட்டு நிலையங்களை அமைத்துள்ளன.

தொழில்நுட்பப் பங்குகள் கடும் வீழ்ச்சி

நிறுவனங்களின் வருவாய் அறிக்கைகள் குறித்த பதற்றம், செயற்கை நுண்ணறிவு முதலீடுகள் தொடர்பான அதிகரிக்கும் அச்சம், புவிசார் அரசியல் அழுத்தங்கள் ஆகியவற்றின் காரணமாக, கடந்த வாரம் தொழில்நுட்பப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. அக்டோபர் 22ஆம் தேதி தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் (Nasdaq) குறியீடு 2.6 விழுக்காடு சரிந்தது.

கட்டுமானத் தளங்களில் ரோபோக்கள்

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த தானியக்க நிறுவனமான ‘பெட்ராக் ரோபோட்டிக்ஸ்’ இவ்வாரம் 600 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.

மண் தோண்டுதல் போன்ற கடினமான பணிகளுக்காகக் கட்டுமானத் தளங்களில் தானியக்க ரோபோக்களை நேரடியாகக் களமிறக்குவதன் மூலம், இந்நிறுவனம் அளப்பரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சிங்கப்பூரில் ‘மியூஸ்’ அறிமுகம்

உணவகங்களில் முன்பதிவு செய்வது, விமானச் சீட்டுக்குப் பதிவு செய்வது, இணையத்தில் பொருள்களின் விலையை ஒப்பிட்டுப் பார்ப்பது போன்ற அன்றாடப் பணிகளை, உரையாடல் மூலமாகவே எளிதாகச் செய்ய முடியும். 

அதற்காக, மெட்டா நிறுவனம் தனது ‘மியூஸ்’ (Muse) செயலியைச் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி முதல், சிங்கப்பூர்ப் பயனர்கள் இந்தச் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோரில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சாதாரண பயனர் சந்தைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ‘ஏஐ’ தனிப்பட்ட உதவியாளராக மியூஸ் உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்