டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே வெடித்த டெஸ்லா மின்சார வாகனம்; ஒருவர் மரணம்

1 mins read
a2d5eadd-16c5-405a-ae95-d5fb4317b2ad
லாஸ் வேகஸ் நகரில் உள்ள டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே வெடித்துத் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மின்சார வாகனம். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: புத்தாண்டு நாளன்று அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா மின்சார வாகனம் வெடித்ததில் ஒருவர் மாண்டார்.

இதுகுறித்து லாஸ் வேகஸ் காவல்துறையும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.

வாகனம் தீப்பற்றி எரிவதை ஹோட்டலுக்கு உள்ளிருந்த சிலரும் வெளியில் இருந்த சிலரும் காணொளி எடுத்தனர்.

காணொளிகள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில், வெடிப்பு டெஸ்லா மின்சார வாகனத்துடன் தொடர்புடையதல்ல என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் ஆலோசகருமான எலோன் மஸ்க் தெரிவித்தார்.

வெடித்து, தீப்பற்றி எரிந்த வாகனத்துக்குள் ஒருவர் மாண்டு கிடந்தார்.

சம்பவம் காரணமாக ஏழு பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

வாகன வெடிப்பு குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தகவல் கிடைத்து நான்கு நிமிடங்களில் அவர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தீயை அணைத்தனர்.

காயம் அடைந்தவர்களில் இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிரம்ப் ஹோட்டலில் இருந்தோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஹோட்டல் விருந்தினர்களில் பெரும்பாலானோர் வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்