தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்துப் பிரதமருக்குச் சட்டரீதியாக நெருக்கடி

2 mins read
808d15ef-88e2-4e57-98e0-03f69d02c361
தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்திற்குத் தற்போது புதிய நெருக்கடி எழுந்துள்ளது.

தாய்லாந்தின் ஊழலுக்கு எதிரான அமைப்பு ஷினவாத்திடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

அண்மையில் திருவாட்டி ஷினவாத் கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சன்னிடம் தொலைப்பேசியில் பேசினார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்தச் சர்ச்சையால் ஷினவாத்தின் பதவிக்கும் ஆட்சிக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஷினவாத்தின்மீது தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து தாய்லாந்தின் ஊழலுக்கு எதிரான அமைப்பினால், பிரதமர் ‌ஷினாவாத் ஊழலில் ஈடுபட்டாரா, தெரிந்தே சட்டத்தை மீறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

அண்மையில் கம்போடியத் தலைவர் சென்னுடன் திருவாட்டி ஷினவாத் இருநாட்டு எல்லை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பேசினார். உரையாடலின்போது திருவாட்டி ஷினவாத் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளபதியைத் தமது எதிரியெனக் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து ‌ விலகவேண்டும் என்று பலத்த எதிர்ப்பு இருந்தாலும் தாம் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என்று 38 வயது ஷினவாத் அறிவித்துள்ளார்.

சர்ச்சை காரணமாக ஷினவாத் கூட்டணியில் இருந்த பும்ஜெய்தாய் கட்சி கூட்டணியிலிருந்து விலகியது. அக்கட்சியிடம் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

பும்ஜெய்தாய் கட்சியின் விலகலால் 495 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 255 உறுப்பினர்களுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் ஷினவாத்.

தற்போது தமது அமைச்சரவையை மாற்றியமைப்பதிலும் ஷினவாத் கவனம் செலுத்தி வருகின்றார்.

சிக்கலான நேரத்தில் தமக்குத் துணையாக நின்ற சிறு கட்சிகளுக்கு அமைச்சரவையில் அவர் இடம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்