தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தும் கம்போடியாவும் சண்டை நிறுத்தம் பற்றிப் பேச இணக்கம்: டிரம்ப்

1 mins read
8d50031e-faae-4fdc-a7f4-1b6cacdee278
கம்போடியாவின் வடமேற்கில் உள்ள ஓடர் மீன்ச்சி மாநிலத்தின் தற்காலிக முகாமில் மக்கள் கூடியிருக்கின்றனர். - படம்: இபிஏ

கம்போடிய, தாய்லாந்துத் தலைவர்கள் சண்டை நிறுத்தம் குறித்துப் பேச உடனடியாகச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியில் சண்டை நடந்துவரும் நிலையில் திரு டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது.

தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தாம் வீச்சாயாச்சாய் திரு டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார். சண்டையை நிறுத்துவதற்குத் தாய்லாந்து கொள்கை அளவில் இணங்குவதாக அவர் சொன்னார். ஆனால் கம்போடியாவும் நேர்மையான முறையில் அதைப் பின்பற்ற முன்வர வேண்டும் என்றார் திரு ஃபும்தாம்.

ஸ்காட்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் இந்த விவகாரத்தின் தொடர்பில் பல பதிவுகளை வெளியிட்டார். அவற்றுக்குப் பதிலளிக்கும் வகையில் திரு ஃபும்தாமின் ஃபேஸ்புக் பதிவு அமைந்துள்ளது.

கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட்டுடனும் திரு ஃபும்தாமுடனும் பேசியதாகத் திரு. டிரம்ப் சொன்னார். எல்லைப் பூசல் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ளப்போவதில்லை என்று எச்சரித்ததாக அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இரு நாடுகளும் உடனடியாகச் சண்டையை நிறுத்தவும் அமைதியை நிலைநாட்டவும் விரும்புகின்றன என்றார் அவர்.

கடந்த 13 ஆண்டுகளில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் நடந்த ஆகக் கடுமையான சண்டையாக இது கருதப்படுகிறது. அண்மைச் சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 130,000க்கும் அதிகமானோர் வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்