பேங்காக்: தாய்லாந்தில் மார்ச் 22 முதல் மார்ச் 27 வரை இடியுடன் கூடிய மழை பெய்யலாம், பெருங்காற்று வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மார்ச் 22, 23 தேதிகளில் நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தெற்கு மற்றும் தென்கிழக்குத் திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
அதே நேரத்தில், தாய்லாந்தின் வடபகுதியில் வெப்பம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதனால், பல இடங்களில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச் 24 முதல் மார்ச் 27 வரை வடக்கு மற்றும் மத்திய வட்டாரங்களின் சில இடங்களில் மிகக் கடுமையான வெப்பம் நிலவும். இருப்பினும், வெப்பக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடரும் என்பதால் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சூறாவளி வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியைப் பொறுத்தவரை, தாய்லாந்து வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வலுவிழந்த நிலையில் காற்று வீசுவதால், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வளைகுடாப் பகுதியில் கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும்; இடி மழையின்போது அலைகளின் சீற்றம் இன்னும் அதிகமாக இருக்கும்.
தாய்லாந்தின் வடபகுதி மக்கள் மழை பெய்யும்போதும் சூறாவளி வீசும்போதும் திறந்தவெளிகள், பெரிய மரங்கள், பாதுகாப்பற்ற கட்டடங்கள், விளம்பரப் பலகைகளின் அருகே நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் பயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விவசாயிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

