தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து எல்லையில் பூசல்: அனைத்துலக நீதிமன்றத்திடம் கம்போடியா புகார்

2 mins read
c01c232b-e44f-470d-90be-4c002e4d5812
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் தாய்லாந்து ராணுவத் தளபதி ஜெனரல் பானா கிலேய்ப்புலோட்துக் (வலது), கம்போடிய ராணுவ ஜெனரல் மாவ் சோஃபியான் (இடது). - படம்: இபிஏ

நோம்பென்: தாய்லாந்துடனான எல்லை சார்ந்த பூசல்கள் தொடர்பில் கம்போடியா, அனைத்துலக நீதிமன்றத்திடம் புகார் கொடுக்கவுள்ளது.

கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட் திங்கட்கிழமை (ஜூன் 2) இதனைத் தெரிவித்தார். எல்லைப் பகுதியில் அண்மையில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து கம்போடியா புகார் கொடுக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தாய்லாந்துத் தரப்பிலும் இந்த விவகாரங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்றத்திடம் தெரியப்படுத்தப்படும் என்று கம்போடியா நம்பிக்கை கொண்டுள்ளது. எல்லைப் பகுதியில் தொடரும் நிலையற்ற சூழலால் மறுபடியும் ஆயுதங்களுடன் மோதல் ஏற்படுவதைத் தடுப்பது நோக்கமாகும்,” என்று திரு ஹுன் மானெம் அரசியல் சந்திப்பு ஒன்றின்போது கூறினார்.

அண்டை நாடுகளான கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே 2008ஆம் அண்டில் ராணுவ மோதல்கள் தொடங்கின. அதனையடுத்து பல ஆண்டுகளாக அவ்வப்போது வள்முனை வெடித்துள்ளது. குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்.

ஆக அண்மையில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். ‘எமரெல்ட் ட்ரையாங்கல்’ எனப்படும் கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் கூட்டு எல்லைப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார்.

அதற்கு மறுநான் கம்போடியாவின் வெளியுறவு அமைச்சு தலைநகர் நோம்பென்னில் உள்ள தாய்லாந்துத் தூதரகத்துக்குக் கடிதம் அனுப்பியது. தங்கள் ராணுவ வீரர் எவ்வித மிரட்டலும் விடுக்காத நிலையில் அவர் கொல்லப்பபட்டார் என்பதைக் கடிதத்தில் குறிப்பிட்ட கம்போடிய வெளியுறவு அமைச்சு, அதன் தொடர்பில் உடனடியாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது.

அச்சம்பவம் கம்போடிய சுய ஆட்சி உரிமையை மீறும் செயல் என்று நோம்பென் சாடியது. அமைதியான, அரசதந்திர வழிகளில் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தாங்கள் இன்னமும் விரும்புவதாக நோம்பென் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை அனைத்துலக நீதிமன்றத்திடம் கொண்டு செல்ல தாய்லாந்து ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கம்போடியா புகார் கொடுக்கும் என்று திரு ஹுன் மானெட் குறிப்பிட்டார். இரு நாடுகளிலும் உள்ள சிறிய தீவிரவாதக் குழுக்கள்தான் எல்லையில் வன்முறையைத் தூண்டுவதாக அவர் சொன்னார்.

இதுகுறித்து தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்