பெய்ஜிங்: தாய்லாந்தும் கம்போடியாவும் இருதரப்பு நம்பிக்கையை (mutual trust) மீண்டும் வளர்த்துக்கொள்ளப் போவதாகவும் போர்நிறுத்தத்தை வலுவாக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன.
தாய்லாந்து, கம்போடியா ஆகியவற்றுடன் இணைந்து சீனா வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல வாரங்களாகத் தொடர்ந்த சண்டை கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 27) முடிவுக்கு வந்தது. அந்தப் பூசலில் குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டனர். அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
எல்லைப் பிரச்சினை குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிவுடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த தாய்லாந்து, கம்போடிய முன்னணி அரசதந்திரிகள் யுனான் மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை (டிசம்பர் 28, 29) சென்றனர்.
இந்தப் போர்நிறுத்தம், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டது என்ற திரு வாங், போர்நிறுத்தத்தைப் பாதியில் கைவிடவோ மறுபடியும் சண்டையில் ஈடுபடவோ வேண்டாம் என்று கம்போடியாவையும் தாய்லாந்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னோக்கிச் செல்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்று திரு வாங் குறிப்பிட்டார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் தங்களுக்கிடையிலான அரசியல் ரீதியான இருதரப்பு நம்பிக்கையை மறுபடியும் வளர்த்துக்கொள்ளும் என்றும் தங்களுக்கிடையிலான தொடர்புகளில் மாற்றத்தை உருவாக்கிக்கொள்ளும் என்றும் வட்டார அமைதியை நிலைநாட்டும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை சீனாவின் அதிகாரத்துவ ஊடகமான சின்ஹுவா வெளியிட்டது.

