சஹாராவின் வெப்பநிலை 2070க்குள் தாய்லாந்திலும் நிலவக்கூடும்

சஹாராவின் வெப்பநிலை 2070க்குள் தாய்லாந்திலும் நிலவக்கூடும்

1 mins read
202b759d-a308-482f-a52b-07083415c0e4
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சென்ற வாரம் அதிக வெப்பத்தில் நடமாடும் மக்கள். - படம்: இபிஏ
multi-img1 of 2

பேங்காக்: சஹாரா பாலைவனத்தில் நிலவும் வெப்பநிலை, 2070ஆம் ஆண்டுக்குள் தாய்லாந்தின் வெப்பநிலையாக மாறக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக, உலகின் சில பகுதிகளில் காலங்காலமாக மனிதர்கள் பழக்கப்பட்டு வந்துள்ள வெப்பநிலை அவர்களுக்குப் பழக்கப்படாத அளவு அதிகமாகி வருவதாகப் பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பருவநிலை குறித்த ஒரு கட்டுரையையும் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பருவநிலை ஆய்வின் முடிவுகளையும் பற்றிப் பேசும்போது ‘கிளைமட் கனெக்டர்ஸ்’ எனும் பருவநிலைத் திட்டத்தின் இயக்குநர் தாரா புவாகாம்ஸ்ரீ எச்சரிக்கை விடுத்தார். மனித குலம் உயிர் வாழ்வதற்குச் சவாலாக இருக்கக்கூடிய அளவு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டது.

தற்போதைய நிலை

தற்போதைய சூழலிலேயே பலர் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை பதிவாகும் இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். எனினும், இந்த வெப்பநிலை அதிகரிப்பு, பெரும்பாலும் சமூகங்கள் பழக்கப்படுத்திக்கொள்ளும் அளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆண்டுதோறும் பதிவாகும் சராசரி வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரித்தால் அத்தகைய சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே கவலை தரும் அம்சமாக இருக்கிறது. அத்தகைய வெப்பநிலை, தற்போது உலகின் 0.8 விழுக்காட்டுப் பகுதிகளில் மட்டுமே காணப்படுவதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சஹாரா பாலைவனத்தில்தான் இருக்கின்றன என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை தேவை

பசுமைக்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் முலம் நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம் என்று வலியுறுத்தப்படுகிறது. சஹாராவில் நிலவும் வெப்பநிலையை வருங்காலத்தில் தாய்லாந்து எதிர்கொள்ளாமல் இருக்க இப்பொழுதே உகந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்