பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து அந்நாட்டின் வடகிழக்கிலுள்ள உபோன் ரட்சதானி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கட்டுமானத் தளத்திலிருந்த பாரந்தூக்கி விழுந்ததில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
ரயிலின் ஒரு பெட்டிமீது பாரந்தூக்கி விழுந்ததை அடுத்து, அந்த ரயில் தடம்புரண்டது.
நக்கோன் ரட்சசிமா மாநிலத்தின் சிக்கியோ மாவட்டத்தில் புதன்கிழமை (ஜனவரி 14) காலை 9 மணியளவில் இவ்விபத்து நேர்ந்தது.
அதிவிரைவு ரயில் திட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரந்தூக்கி நிலைகுலைந்து, அவ்வழியாகச் சென்ற ரயில்மீது விழுந்தது என்று காவல்துறை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, தடம்புரண்ட அந்த ரயிலில் சிறிது நேரம் தீப்பற்றியதாகவும் பின்னர் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“காலை 9 மணியளவில், மேலிருந்து ஏதோ கீழே விழுந்தது போன்ற பெருஞ்சத்தத்தைக் கேட்டேன். அதனைத் தொடர்ந்து, இருமுறை வெடிப்புச் சத்தமும் கேட்டது,” என்று அப்பகுதியில் இருந்த மித்ர இந்த்ரபன்யா, 54, கூறினார்.
விரைந்து சென்று பார்த்தபோது, மூன்று பெட்டிகளைக் கொண்டிருந்த ரயில்மீது பாரந்தூக்கி விழுந்திருந்ததைத் தாம் கண்டதாகவும் அவர் சொன்னார்.
அந்த ரயிலில் 195 பேர் இருந்ததாகவும் மாண்டவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிஃபட் ரட்சகித்பிரகார்ன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்று தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சர்ன்விராக்குல் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
“இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. முந்தைய சம்பவங்களுடனும் இதே நிறுவனத்துடன் தொடர்புள்ளதாக அறிகிறேன். விபத்துகளுக்கு மீண்டும் மீண்டும் பொறுப்பாகும் கட்டுமான நிறுவனங்களுக்குத் தடைவிதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதற்கு இதுவே தருணம்,” என்றும் அவர் சொன்னார்.
மீட்புப் பணிகள் தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.4 பில்லியன்) மதிப்பில் தாய்லாந்தில் அதிவிரைவு ரயில் கட்டமைப்பை அமைக்கும் பணி சீனாவின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.
வரும் 2028ஆம் ஆண்டிற்குள் பேங்காக் நகரை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங் நகருடன் இணைப்பதே அதன் நோக்கம்.

