பேங்காக்: கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவில் தாய்லாந்தின் தென்பகுதியில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில நாள்களில் தென்தாய்லாந்தில் கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் துயர்துடைப்பு முகாம்களில் தொடர்ந்து தங்கி வருகின்றனர்.
நவம்பர் 22ஆம் தேதியிலிருந்து தென்தாய்லாந்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதனால் கிட்டத்தட்ட 664,170 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு, நிர்வாகத்துறை தெரிவித்தது.
டிசம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, ஏறத்தாழ 22,000 பேர் தற்காலிகப் புகலிடங்களில் தங்குகின்றனர்.
ஏழு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிவாரண, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும்படி தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஜிராயு ஹோங்சப் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மலேசியாவில் ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், கிளந்தானிலும் திரங்கானுவிலும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை டிசம்பர் 2ஆம் தேதியன்று 138,052க்குக் குறைந்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.
இந்த எண்ணிக்கை டிசம்பர் 1ஆம் தேதி இரவு 140,896ஆக இருந்தது.
நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மாநிலங்களின் துயர்துடைப்பு முகாம்களில் தங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பேராக், ஜோகூர், பாகாங், கெடா ஆகிய மாநிலங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு துயர்துடைப்பு முகாம்களில் தங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பேராக்கில் துயர்துடைப்பு முகாம்களில் தங்குவோர் எண்ணிக்கை 130லிருந்து 590ஆக அதிகரித்துள்ளது.
ஜோகூரில் இந்த எண்ணிக்கை 728லிருந்து 803ஆக அதிகரித்துள்ளது.
மலாக்காவில் துயர்துடைப்பு முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 241ஆக உள்ளது.
இந்நிலையில், பாகாங், சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசங்கள், நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.