ஆசியானுடன் உறவைச் சீராக்குவதில் மியன்மாருக்கு உதவ முன்வந்தது தாய்லாந்து

ஆசியானுடன் உறவைச் சீராக்குவதில் மியன்மாருக்கு உதவ முன்வந்தது தாய்லாந்து

1 mins read
f0008825-0361-406a-8a18-b5a0d5671d99
தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியாவ். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: ஆசியானுடன் உறவைச் சீராக்கிக்கொள்ள முயலும் மியன்மாருக்கு உதவத் தாய்லாந்து முன்வந்துள்ளது.

ஆசியான் அமைப்பின் கூட்டங்களில் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் அது கலந்துகொள்ளவில்லை. தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியாவ் புதன்கிழமை (ஏப்ரல் 22) அத்தகவலை வெளியிட்டார்.

ராணுவத்தின் முன்னாள் தளபதி மின் ஆங் ஹிலெய்ங், 2021ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் ஆட்சியைக் கவிழ்த்துப் பின்னர் நாட்டின் அதிபரானார்.

மியன்மார் ஜனநாயகப் பாதைக்கு முழுமையாய்த் திரும்புவதற்கு அது தடையாய் அமைந்தது. அங்குக் குழப்பம் உண்டானது. உள்நாட்டுப் போர் வெடித்தது. ஆசியான் தலையிட்டும் பயனில்லை. அதனால் அமைப்பின் உச்சநிலை மாநாடுகளில் கலந்துகொள்வதிலிருந்து மியன்மாரின் ஆளும் ஜெனரல்களை விலக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அண்மைத் தேர்தலில் மூத்த ஜெனரல் மின் ஆங், நல்ல எதிர்த்தரப்பு எதுவும் இல்லாததால் அவரின் பிடியை வலுப்படுத்திக்கொண்டார்.

“ஆசியான் அமைப்புக்கு மியன்மார் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்குரிய முறையான நடவடிக்கைகளை எடுப்பதே எங்கள் கொள்கை,” என்று திரு சிஹாசக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஆனால் திரும்புவதற்கு முன்னர் நிச்சயமாக ஆசியானின் அக்கறைகளுக்கு மியன்மார் பதிலளிக்க வேண்டும்,” என்றார் அவர்.

மியன்மார் பூசல், ஆசியானுக்கு நீண்டகாலமாகவே நெருடலாக இருந்துவருகிறது.

ஆயினும் ஆசியானில் தொடர்ந்து நீடிக்கிறது மியன்மார். அமைப்பின் உயர்நிலைக் கூட்டங்களில் அதனை அமைச்சர்நிலை அதிகாரிகள் பிரதிநிதிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்