பெய்ஜிங்: தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ர சீனப் பயணிகளைத் தாய்லாந்துக்கு ஈர்க்கும் முயற்சியில் தமது உடலில் சீன ரத்தம் ஓடுவதாகக் கூறியுள்ளார்.
அத்துடன், சீனக் குடிமக்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளைத் தாமே தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் தாய்லாந்தில் கடத்தப்பட்ட சீன நடிகர் ஒருவர் மியன்மாரில் உள்ள மோசடி நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சீனப் பயணிகளின் பாதுகாப்பு விவாதப் பொருளாகி உள்ளது. தாய்லாந்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் சீனர்களே பெரும்பகுதியினர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
“தாய்லாந்து மக்கள் எப்பொழுதும் சீனா வருகின்றனர். சீனாவுக்கு வரும் தாய்லாந்து நாட்டவர்கள் தங்கள் சொந்த வீட்டுக்கு வருவதுபோல் உணர்கின்றனர். அதேபோல் சீன நாட்டவரும் தாய்லாந்து வந்து அதேபோன்ற உணர்வை அனுபவிக்கலாம்,” என்று சீன டெய்லி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6ஆம் தேதி) கூறியுள்ளார்.
தாய்லாந்துப் பிரதமரான திருவாட்டி பேடோங்டார்ன் முன்னாள் தாய்லாந்துப் பிரதமரான தக்சின் ஷினவத்ரவின் மகளாவார். இவரது மூதாதையர் தென்சீனாவின் குவாங்டோங் மாநிலத்திலிருந்து வந்தவர்கள் என்றும் திருவாட்டி பேடோங்டார்ன் கூறுகிறார்.

