மக்கள் ஆதரவை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் தாய்லாந்துப் பிரதமர்

2 mins read
f7f7d4fc-f0e5-4995-8c4d-41ee09730fc2
தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் தமது அரசாங்கத்திற்கான ஆதரவை அதிகரிப்பதிலும் நாட்டின் பொருளியல் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மை காலமாக தாய்லாந்தின் பொருளியல் நெருக்கடி நிலையில் உள்ளது. குடும்பங்கள் அதிக அளவில் கடன் சுமையில் உள்ளன, செலவுகள் செய்வதையும் குறைத்துள்ளன.

இந்நிலையில், பெடோங்டார்ன் பிரதமராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தமது தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பெடோங்டார்ன் தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களிடம் எடுத்துரைத்தார்.

“தொழில்கள் சிறக்க எளிமையான கடன் வசதிகள், கிராமங்களுக்கு நிதி உதவி, பேங்காக்கில் குறைந்த வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வீடு, மின்சாரக் கட்டணக் குறைப்பு, ரயில் பயணச்சீட்டு விலை குறைப்பு உள்ளிட்டவற்றை தமது அரசாங்கம் தாய்லாந்து மக்களுக்கு வழங்கும்,” என்று பெடோங்டார்ன் தெரிவித்தார்,

தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 49 விழுக்காடு நிதி சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் நடவடிக்கைகள் மூலம் வருகிறது. அவற்றை சரியாக மாற்றி விதிமுறைகளை பின்பற்றவைத்தால் பெரிய அளவில் பொருளியல் வளர்ச்சி கிடைக்கும் என்று பெடோங்டார்ன் கூறினார்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு நம்பிக்கைக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

38 வயதான பெடோங்டார்ன், முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்தின் மகள். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் மூலம் தாய்லாந்து வரலாற்றில் ஆக இளைய பிரதமரானார் பெடோங்டார்ன்.

பணக்கார பின்னணியில் இருந்து வந்த பெடோங்டார்ன் எவ்வாறு தாய்லாந்து மக்களின் துயரத்தை துடைப்பார் என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் பெடோங்டார்ன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை மக்களை ஈர்க்கும் விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்