பேங்காக்: இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை, தாய்லாந்துக்கு 19 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுப்பயணத்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம் 795 பில்லியன் பாட் ($22.26 பில்லியன்) வருவாயை கிடைத்துள்ளது என அமைச்சு கூறியது.
சீனாவிலிருந்து தாய்லாந்துக்கு வருவோர் இனி விசா எடுக்கத் தேவையில்லை என தாய்லாந்து அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு, சுற்றுப்பயணத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் இதன்மூலம் அந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அமைச்சு சொன்னது.
மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த வாரம், நீண்ட வாரயிறுதி இடம்பெறுவதால் அந்நாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் சுற்றுப்பயணத் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
கஸக்ஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கு செப்டம்பர் 25 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிவரை விசா தள்ளுபடி செய்வது அத்தகைய திட்டங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.