யூதச் சமூகத் தலைவரின் குடியுரிமையை ரத்துசெய்தது தாய்லாந்து

யூதச் சமூகத் தலைவரின் குடியுரிமையை ரத்துசெய்தது தாய்லாந்து

படம்: த நே‌ஷன், ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

29 Oct 2026 - 7:45 pm

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் யூதச் சமூகத் தலைவர் ரபாய் யோசெஃப் சைம் கான்டோரின் தாய்லாந்துக் குடியுரிமை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அங்கு வெளிநாட்டினருக்கு எதிரான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், தாய்லாந்து அவ்வாறு செய்துள்ளது.

அதற்கான உத்தரவில் தாய்லாந்துப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான திரு அனுட்டின் சார்ன்விராக்குல் கையெழுத்திட்டார்.

அதில் ரபாய் யோசெஃப் சைம் கான்டோர் 2013ஆம் ஆண்டு தாய்லாந்துக் குடியுரிமை பெற்ற பின்னரும் ஆஸ்திரேலியாவுக்கான 16 பயணங்கள் உட்பட அனைத்துலகப் பயணங்களுக்கு தமது அமெரிக்கக் குடியுரிமையைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் தங்களின் முந்தைய வெளிநாட்டுக் குடியுரிமையைத் தொடர்ந்து பயன்படுத்துவது தாய்லாந்தின் குடியுரிமைச் சட்ட நிபந்தனைகளை வெளிப்படையாக மீறும் செயல் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

1993ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தின் யூதச் சமூக அமைப்பை வழிநடத்தியவரான ரபாய் கான்டோரிடம் கருத்துக் கேட்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது.

தேசியப் பாதுகாப்புக்கும் நாட்டின் பொருளியல், சமூக நலன்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வெளிநாட்டினர்மீது தாய்லாந்து அரசாங்கம் தற்பொழுது மிகக் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பது பொதுமக்களுக்கும் நாட்டிற்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உள்துறை அமைச்சு எச்சரித்தது. அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்