காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைத் தடுப்பூசி பயன்படுத்தும் தாய்லாந்து

காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைத் தடுப்பூசி பயன்படுத்தும் தாய்லாந்து

1 mins read
61a6c90d-7843-4c86-a64c-6622e692e8df
தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள டிராட் மாநிலத்தில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 26) மூன்று பெண் யானைகளுக்குக் கருத்தடைத் தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டின் வனவிலங்குக் காப்பகத்தின் இயக்குநர் திரு சுக்கி பூன்சாங் புதன்கிழமையன்று (ஜனவரி 28) தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: காட்டு யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடைத் தடுப்பூசியைத் தாய்லாந்து முதல்முறையாகப் பயன்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள டிராட் மாநிலத்தில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 26) மூன்று பெண் யானைகளுக்குக் கருத்தடைத் தடுப்பூசி போடப்பட்டதாக அந்நாட்டின் வனவிலங்குக் காப்பகத்தின் இயக்குநர் திரு சுக்கி பூன்சாங் புதன்கிழமையன்று (ஜனவரி 28) தெரிவித்தார்.

தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்களில் காட்டு யானைகளின் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு எட்டு விழுக்காடு அதிகரிப்பதை அவர் சுட்டினார்.

மற்ற பகுதிகளில் காட்டு யானைகளின் பிறப்பு விகித அதிகரிப்பு மூன்று விழுக்காடு மட்டும் என்றார் அவர்.

காட்டு யானைகளின் எண்ணிக்கை பேரளவில் அதிகரிப்பதை அனுமதித்தால் நீண்டகால அடிப்படையில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே கூடுதல் பிரச்சினைகள் ஏற்படும் என்று திரு பூன்சாங் தெரிவித்தார்.

யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தப்படவில்லை என்றும் விலங்கியல் மருத்துவர்களும் அதிகாரிகளும் சேர்ந்து தூரத்திலிருந்து கருத்தடைத் தடுப்பூசியை அவற்றின் மீது பாய்ச்சியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 334ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் ஏறத்தாழ 800ஆக அதிகரித்தது. மேலும் ஆயிரக்கணக்கான யானைகள் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தில் யானைகள் தாக்கி இதுவரை ஏறத்தாழ 200 பேர் மாண்டுவிட்டதாகவும் மனிதர்களால் 100க்கும் மேற்பட்ட யானைகள் மடிந்துவிட்டதாகவும் வனத்துறைக் காப்பகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்