பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் சிறைவாசம் செல்வதற்குப் பதிலாக நீண்டநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பில், சட்டத்தின் நிலை குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜூலையில் விசாரணை நடத்தவுள்ளது. அதன் முடிவில் தக்சின் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது.
தக்சின், 75, சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க உதவிய மூன்று மருத்துவர்களைத் தண்டிப்பதற்கான தனது முடிவை தாய்லாந்தின் மருத்துவ மன்றம் நிறுத்திய அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நீதிமன்ற விசாரணை இடம்பெற்றது. இதுகுறித்து மருத்துவ மன்றத்தின் தீர்மானத்தை தனது விசாரணைக்குச் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் கோரியது.
அரசாங்கத்தில் தக்சினுக்கு முறைப்படி பொறுப்பு எதுவும் கிடையாது என்றாலும், அவர் தொடர்ந்து செல்வாக்குமிக்கவராக விளங்குகிறார். தம்முடைய மகளும் பிரதமருமான பேடோங்டார்ன் ஷினவாத் தலைமையிலான பியூ தாய் ஆளுங்கட்சிக்குப் பின்னால் உள்ள சக்தியாக தக்சின் கருதப்படுகிறார்.
மன்னராட்சியை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் வேறொரு வழக்கில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தக்சினுக்கு எதிராக சவால்கள் வலுப்பெற்றுள்ளதால் அரசாங்கத்தில் நிலையற்றச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தாமாகவே நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வந்த தக்சின், 2023ல் தாய்லாந்து திரும்பினார். அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குக் கடன் வழங்குமாறு அரசு நடத்தும் வங்கிக்கு உத்தரவிட்டது, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் பங்குகளை வாங்கி வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக தக்சினுக்கு எட்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அச்சிறைத் தண்டனையை மாமன்னர் ஓராண்டாகக் குறைத்தார். சிறையில் முதல் நாளில் தமக்கு நெஞ்சு வலிப்பதாக தக்சின் கூறியதைத் தொடர்ந்து காவல்துறை மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார்.
மருத்துவமனையின் விஐபி படுக்கைப் பிரிவில் ஆறு மாதங்களாகத் தங்கிய தக்சின், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் நீண்டநாள் அனுமதிக்கப்பட்டிருந்தது மக்களிடையே கடுங்கோபத்தை ஏற்படுத்தியதுடன் அவரது உடல்நலக் குறைவு குறித்த கேள்விகளையும் எழுப்பியது.

