இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

1 of 3
படம்: இபிஏ
படம்: இபிஏ
படம்: ராய்ட்டர்ஸ்

25 Oct 2026 - 3:47 pm

2 mins read

டெல் அவிவ்: இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல் அவிவில் சனிக்கிழமை நடந்த அந்த ஆர்ப்பாட்டமானது பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் ஆட்சி மீதான பொது வாக்கெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

காஸா போருக்குக் காரணமான 2023 அக்டோபர் 7 தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர், பிணையாளிகளின் குடும்பங்களால் தொடங்கப்பட்ட ‘அக்டோபர் மன்றம்’ அந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

அவ்விவகாரம் தொடர்பில் தன்னிச்சையான விசாரணைக் குழுவை அமைக்கக் கோரி, ராபின் சதுக்கத்திலிருந்து பிணையாளிகள் சதுக்கம்வரை மக்கள் திரளாக அணிவகுத்துச் சென்றனர்.

அந்த ஆரப்பாட்டத்தில் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசன்கோட் உள்ளிட்ட நான்கு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அரசியல்வாதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்கும் நெட்டன்யாகுவின் திட்டத்தைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

கடந்த நான்கு ஆண்டுகளில், இஸ்ரேல் இதுவரை இல்லாத மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராலும் மேற்குக் கரைப் பகுதியில் அரங்கேற்றப்படும் வன்முறையாலும் இஸ்ரேல் அனைத்துலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள வணிகத் தடைகளையும் அமெரிக்காவின் ஆயுத உதவிக் குறைப்பையும் எதிர்கொள்ள மாற்று மின்னிலக்கப் பொருளியலை உருவாக்க வேண்டும் என்று நெட்டன்யாகு கூறியிருந்தார்.

அவரது பரிந்துரையை ‘பிபிகாயின்’ எனக் கிண்டல் செய்த ஐசன்கோட், அது உலகப் பொருளியலிலிருந்து நாட்டைத் துண்டித்து அழித்துவிடும் என்றும் சொன்னார்.

இதனிடையே, நெட்டன்யாகு மீண்டும் வென்றால் இஸ்ரேல்மீது பொருளியல் தடைகள் விதிக்கப்படலாம் என்றும் மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் அவலநிலை உருவாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லபிட் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் ஐசன்கோட் அணிக்கு 52 இடங்களும், நெட்டன்யாகு அணிக்கு 50 இடங்களும் கிடைக்கக்கூடும் என அண்மைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்