ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய பள்ளிவாசலுக்கு மிரட்டல் கடிதம்

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய பள்ளிவாசலுக்கு மிரட்டல் கடிதம்

2 mins read
விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது காவல்துறை
b04b3071-9df4-4ae2-bd67-91dab826b880
சிட்னியில் உள்ள லகெம்பா பள்ளிவாசலுக்குப் புதன்கிழமை (பிப்ரவரி 18) அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தில் பன்றியின் படம் வரையப்பட்டிருந்ததுடன் ‘முஸ்லிம் இனத்தினரைக்’ கொலை செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய பள்ளிவாசலுக்கு, புனித நோன்புக்கான ரமலான் மாதத் தொடக்கத்திற்குச் சற்று முன்னதாக மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் அந்நாட்டுக் காவல்துறை வியாழக்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்துள்ளது.

சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது லகெம்பா பள்ளிவாசல். புதன்கிழமை அங்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் பன்றியின் படம் வரையப்பட்டிருந்தது. அத்துடன் ‘முஸ்லிம் இனத்தவரைக்’ கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உள்ளூர் ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

அந்தக் கடிதம் தடயவியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகக் காவல்துறை கூறியது. பள்ளிவாசல் உள்ளிட்ட சமய வழிபாட்டுத் தலங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து சுற்றுக்காவல் பணி இடம்பெறும் என்றும் அது குறிப்பிட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இதேபோன்ற மிரட்டல் கடிதம் அந்தப் பள்ளிவாசலுக்கு அனுப்பப்பட்டது. அதில் தீப்பிடித்து எரியும் பள்ளிவாசல் ஒன்றினுள் முஸ்லிம் மக்கள் இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டிருந்தது.

அதற்குமுன் கடந்த ஜனவரி மாதத்தில் லகெம்பா பள்ளிவாசலுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் 70 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தொடர் மிரட்டல் சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அந்தப் பள்ளிவாசலுக்குக் கூடுதல் பாதுகாவலர்களைப் பணியில் அமர்த்தவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அரசாங்கத்திடம் கூடுதல் நிதியுதவி கோரியிருப்பதாக லெபனானிய முஸ்லிம் சங்கம், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்திடம் கூறியுள்ளது.

புனித ரமலான் மாதத்தில் ஒவ்வோர் இரவும் அந்தப் பள்ளிவாசலில் ஏறக்குறைய 5,000 பேர் தொழுகை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்