வாஷிங்டன்: சீன நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக் சமூக ஊடகத் தளத்தின் செயல்பாடுகளை அமெரிக்காவிடம் விற்க வகைசெய்யும் உத்தரவாணையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிக்டாக்கை அமெரிக்க, உலக முதலீட்டாளர்கள் வாங்கும் திட்டத்தின் மூலம் 2024ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடப்புக்கு வந்த தேசியப் பாதுகாப்புச் சட்டங்களைப் பூர்த்திசெய்ய முடியலாம் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
அதன்படி, டிக்டாக்கின் மதிப்பு 14 பில்லியன் டாலராக (18.1 பில்லியன் வெள்ளி) இருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த மதிப்பு, பல கவனிப்பாளர்களின் கணித்ததைவிட மிகவும் குறைவாகும்.
சென்ற ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தின்படி டிக்டாக்கை சீன உரிமையாளர்கள் விற்காவிட்டால் அது அமெரிக்காவில் தடைசெய்யப்படும். அந்த சட்டத்தை அமல்படுத்துவதை திரு டிரம்ப் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 25) அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.
திரு டிரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவாணை, அமெரிக்காவில் உள்ள டிக்டாக்கின் ‘சொத்துகளை’ விற்க அவர் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. எனினும், அதன் தொடர்பில் பல்வேறு அம்சங்களை இன்னும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
டிக்டாக்கில் பயனர்களுக்குக் காணொளிகளைப் பரிந்துரைக்கும் நெறிமுறைக்கு எந்த நிறுவனம் இனி உரிமை வகிக்கும் போன்றவை அந்த அம்சங்களில் அடங்கும்.