பெய்ஜிங்: சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குன்மிங்கில் மோசமான ரயில் விபத்து நேர்ந்துள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 27), தண்டவாளத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள்மீது ரயில் மோதியது. அதில் 11 பேர் மாண்டனர். இருவருக்குக் காயம் ஏற்பட்டது.
சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
லூயாங் நகரம் நிலையத்தில் ரயில்மூலம் நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவிகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது தண்டவாள வளைவில் இருந்த ஊழியர்கள் விபத்தில் சிக்கினர்.
தற்போது அந்த ரயில் நிலையம் வழக்கம்போல் சேவை வழங்குகிறது என்றும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் ஆகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டது சீனாவின் ரயில் கட்டமைப்பு. அது 160,000 கிலோமீட்டருக்கு மேல் சேவை வழங்குகிறது. ஓர் ஆண்டுக்கு மட்டும் பில்லியன் கணக்கான ரயில் பயணங்கள் அங்குப் பதிவாகின்றன.
பெரும்பாலான நேரங்களில் சீனாவின் ரயில் சேவைகளில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு ஜிஜியாங் வட்டாரத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 40 பேர் மாண்டனர். 200 பேர் காயமடைந்தனர்.

