அமெரிக்காவின் $226 பில்லியன் ஏவுகணை தற்காப்பு அமைப்பு; சீனா பெருங்கவலை

2 mins read
8e8eaa3a-cb1f-4fd1-9a20-8ef82ec83517
வாஷிங்டன் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோல்டன் டோம் அறிவிப்பில் உடனிருந்த அத்திட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ள அமெரிக்க விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின்.  - படம்: இபிஏ

வாஷிங்டன்: சீனா, ரஷ்யாவின் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க ‘கோல்டன் டோம்’ எனப்படும் 175 பில்லியன் அமெரிக்க டாலர் (226 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (மே 20) அறிவித்துள்ளார்.

அமைப்புக்கான வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்த டிரம்ப், அந்தத் திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின் முன்னணி திட்ட மேலாளராக இருப்பார் என்றார்.

அத்திட்டம் குறித்து சீனா ‘பெருங்கவலை’ அடைந்துள்ளது என்றும் வாஷிங்டன் அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் திரு மாவ் நிங் புதன்கிழமை (மே 21) கூறினார்.

“அது கடுமையான தாக்குதல் அபாயங்களைக் கொண்டுள்ளது. விண்வெளியை ராணுவமயமாக்குவதுடன் ஆயுதப் போட்டி அபாயங்களையும் அதிகரிக்கிறது,” என்ற அவர், வாஷிங்டன் அத்திட்டத்தைக் கைவிட்டு, பெரிய நாடுகள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோல்டன் டோம், உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணிக்கவும் இடைமறிக்கவும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்பக்கூடும்.

அந்த விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை தற்காப்பு முறையை, “பல ஆண்டுகளுக்கு முன்னர் ரொனால்ட் ரீகன் அதை விரும்பினார். ஆனால் அப்போது அதற்கான தொழில்நுட்பம் இல்லை,” என்ற டிரம்ப், முன்னாள் அதிபர் ரீகனால் முன்மொழியப்பட்ட “ஸ்டார் வார்ஸ்” எனும் திட்டத்தைக் குறிப்பிட்டார்.

தனது பதவிக்காலம் முடிவதற்குள், ஜனவரி 2029க்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படும் என்ற டிரம்ப், அலாஸ்கா, புளோரிடா, ஜார்ஜியா, இந்தியானா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தால் நேரடியாகப் பயனடையும் என்றார்.

கோல்டன் டோம் என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்புத் திட்டமாகும், இது அமெரிக்க நிலப்பரப்பை மேம்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“கோல்டன் டோம் எங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்கும்” என்ற டிரம்ப், கனடா அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதாகக் கூறினார்.

கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகம் தானும் தனது அமைச்சர்களும் புதிய பாதுகாப்பு, பொருளியல் உறவு குறித்து அமெரிக்காவுடன் விவாதித்துக் கொண்டிருப்பதாக ஓர் அறிக்கையில், கூறியது.

எனினும் இத்திட்டத்திற்கான அரசியல், நிதியளிப்பு ஆதரவு நிச்சயமற்றதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்