டிரம்ப்: பிலிப்பீன்சிலிருந்து வரும் பொருள்களுக்கு 19% வரி; முன்பைவிட 1% குறைவு

1 mins read
dfa69ffd-c413-4f51-8f60-16e17f35e0f8
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டின்ண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (இடம்) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) சந்தித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பிலிப்பீன்சிலிருந்து தருவிக்கப்படும் பொருள்களுக்கு 19 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தெரிவித்துள்ளார். அது இம்மாதத் தொடக்கத்தில் அவர் அறிவித்திருந்த 20 விழுக்காட்டு வரியைவிடக் குறைவு. அமெரிக்கப் பொருள்களுக்கு வரி ஏதுமில்லை என்றார் திரு. டிரம்ப்.

வெள்ளை மாளிகையில் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியரைச் சந்தித்த பிறகு, ட்ரூத் சோ‌ஷியல் ஊடகத்தில் அமெரிக்க அதிபர் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். திரு. மார்க்கோஸ் அமெரிக்காவுக்கு அழகிய பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். இந்தப் பயணத்தின்போது உடன்பாடு எட்டப்படும் என்று திரு. டிரம்ப் உறுதியாகக் கூறினார். திரு. மார்க்கோஸ் மிகவும் நல்ல முறையிலும் கடுமையான வகையிலும் வர்த்தக பேரப் பேச்சில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிபர் பாராட்டினார்.

இரு நாடுகளின் ராணுவத்தினரும் இணைந்து பணியாற்றுவர் என்றும் திரு. டிரம்ப் சொன்னார். ஆனால் அது பற்றிய மேல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

திரு. டிரம்ப் இரண்டாம் தவணைக்காலத்தில் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவுக்குச் சென்றுள்ள முதல் தென்கிழக்காசியத் தலைவர் திரு. மார்க்கோஸ்.

கடந்த ஆண்டு (2024) அமெரிக்காவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு US$23.5 பில்லியன். அதில் வா‌ஷிங்டனுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை ஏறக்குறைய US$5 பில்லியன்.

இரு நாடுகளும் ஏராளமான வர்த்தகத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு. டிரம்ப், அவற்றின் மதிப்பு வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்