தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்: வாகனங்கள், மருந்துகள், சில்லுகளுக்கு 25% வரி அறிமுகப்படுத்தப்படும்

1 mins read
2826d4a4-bfe1-4e73-947c-5d8fa87c2db3
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நியாயமற்ற வகையில் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நீண்டகாலமாகவே குறைகூறி வருகிறார். - படம்: ஏஎஃப்பி

பால்ம் பீச்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், பகுதிமின்கடத்தி, மருந்துகள் ஆகியவற்றுக்கு ஏறத்தாழ 25 விழுக்காடு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த ஆக அண்மைய அறிவிப்பு அனைத்துலக வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் பிப்ரவரி 14ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நியாயமற்ற வகையில் வரி விதிக்கப்படுவதாக திரு டிரம்ப் நீண்டகாலமாகவே குறைகூறி வருகிறார்.

உதாரணத்துக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 10 விழுக்காடு வரி விதிக்கிறது.

இது அமெரிக்காவில் வசூலிக்கப்படும் கார் வரியான 2.5 விழுக்காட்டைவிட நான்கு மடங்கு அதிகம்.

பதிலுக்குப் பதில் வரி விதிக்கும் அணுகுமுறையைத் தவிர்ப்பது குறித்து அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், தாம் எடுத்துள்ள முடிவுகளின் விளைவாக அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் ஐரோப்பிய ஒன்றியம் குறைக்க இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறினார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை மறுத்துள்ளனர்.

அமெரிக்காவிடமிருந்து கூடுதல் கார்கள், மற்ற பொருள்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் என்றார் திரு டிரம்ப்.

குறிப்புச் சொற்கள்