தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் சாதனை! கமலா வேதனை!

6 mins read
fee9ef49-2b4c-4403-84f8-cdd10f45058b
அமெரிக்க அதிபர் தேர்தலில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட டோனல்ட் டிரம்ப் (வலது), கமலா ஹாரிஸ். - படம்: ஃப்லக்ஸ் இமேஜ் (copyright-free)

வரலாறு படைக்கத் தவறிய கமலா

-கி.ஜனார்த்தனன்

பிரசாரத்தில் கமலா ஹாரிஸ்.
பிரசாரத்தில் கமலா ஹாரிஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பின் பாதை, ஓரளவு நேராக இருந்தது. ஆனால், கமலா ஹாரிசுக்கோ முதலும் கோணல், முற்றிலும் கோணல்.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் வழக்கமாக 12 முதல் 18 மாதங்கள் வரையில் பிரசாரம் செய்வார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் கடைசி நேர விலகல், திருவாட்டி ஹாரிசுக்கு நான்கு மாதத்திற்கும் குறைவான காலஅவகாசத்தையே கொடுத்தது.

ஜனநாயகக் கட்சியை இழிவுபடுத்தும் அமெரிக்காவின் வலதுசாரி ஊடகங்கள், அதிபராகத் தொடர்வதற்கான மன ஆரோக்கியம் திரு பைடனுக்கு இல்லை என்று பல ஆண்டுகளாகக் கூறி வந்ததை மெய்ப்பிக்கும் விதமாக அந்நிகழ்வு இருந்தது.

ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவாளர்கள் பெருநகரங்கள் உள்ள மாநிலங்களில் கூடி வாழ்கின்றனர். குடியரசுக் கட்சி வாக்காளர்களோ, அதிக மாநிலங்களில் நாட்டுப் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் படர்ந்து வாழ்கின்றனர்.

அதிக வாக்காளர்களைக் கொண்ட மாநிலங்களைக் குறிவைத்து கைப்பற்றவேண்டும் என்ற விவேகமும் முக்கியமாக இருந்தது.

கலிஃபோர்னியா, மேசசூசட்ஸ் போன்ற மாநிலங்களைப் போல அலபாமா, மிசிசிப்பியில் பிரசாரம் செய்ய முடியாது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் தங்கள் பிரசார உத்திமுறைகளில் காண்பித்த பன்முகத்தன்மையும் நீக்குப்போக்கும் திருவாட்டி ஹாரிசுக்கு இல்லை.

ஜனநாயகக் கட்சி வாக்காளர்களும் குடியரசுக் கட்சி வாக்காளர்களும் தங்களது கொள்கைகள், சிந்தனைகளில் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள். தொடக்கத்தில் அவர்கள் முறையே இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் பார்க்கப்பட்டாலும் அவர்களை இப்போது அவ்வளவு எளிதாகவும் கணிக்க இயலாது.

இருந்தபோதும், அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வாக இருந்தன - எதிர்கால நிச்சயமின்மை, குறிப்பாக பொருளியல் நிச்சயமின்மை குறித்த அச்சமும், விலையேற்றமும். அதிலும், உணவு விலையேற்றத்தின் காரணமாகப் பொதுமக்களும் சிறிய வர்த்தகர்களும் அதிருப்தி அடைந்தனர்.

திரு டிரம்ப், விடாமல் பொய் கூறுபவர் என்று சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த செய்தி ஊடகங்களுமே பொய் கூறுவதாக நினைக்கும் ஒருபகுதி மக்கள், அவரது வார்த்தைகளிலிருந்து நம்பிக்கை பெற்றதாகக் குறிப்பிட்டனர்.

ஹாரிஸ், பைடன், ஹில்லரி கிளிண்டன் உள்ளிட்ட பலர், நடப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் தங்களது தவறுகளை மறைப்பதாகவும் முதன்மை ஊடகங்கள் அவர்களுக்குத் துணைநிற்பதாகவும் நினைக்கின்றனர்.

தகவல் உண்மையோ, பொய்யோ, மனத்தில் உதிக்கும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துபவராகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் திரு டிரம்ப், திருவாட்டி ஹாரிசைவிட பலருக்கும் நேர்மையாகத் தெரிந்ததும் அவருக்குப் பின்னடைவை அளித்தது.

குடியரசுக் கட்சியினரால் கைவிடப்பட்ட முன்னாள் துணையதிபர் டிக் சேனி போன்ற அரசியல்வாதிகளுடன் இணைந்து திருவாட்டி ஹாரிஸ் பிரசாரம் செய்தது இறுதியில் அவருக்கு எதிர்வினையாக முடிந்துவிட்டது.

2022ல் கருக்கலைப்பு உரிமைகள் மேலும் இறுக்கமாகின. இதனை முடிவு செய்தது அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் என்றாலும் பைடன் நிர்வாகத் தரப்பின்மீது அவரது ஆதரவாளர்களின் அதிருப்தி அதிகரித்தது.

கருக்கலைப்பு உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க உறுதியளித்த திருவாட்டி ஹாரிசுக்காக இளம் பெண்கள் திரளாக வாக்களித்தனர். ஆனால், ஒட்டுமொத்த பெண்களிலிருந்து 57 விழுக்காட்டு வாக்குகளை மட்டும் அவர் பெற்றதாக முன்னோட்ட வாக்கெடுப்புகள் காட்டின.

தற்போதைய காலத்தில் கருக்கலைப்பு விவகாரத்தைக் காட்டிலும் பொருளியல் விவகாரங்களையே வயது முதிர்ந்த பெண்கள் முதன்மைப்படுத்துகின்றனர் என்பதை இது காட்டக்கூடும்.

பாலஸ்தீன விவகாரத்தை பைடன் நிர்வாகம் முறையாகக் கையாளவில்லை என்ற பார்வை, பொதுவாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்க முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளையும் குறைத்திருக்கிறது.

அத்துடன், பாலின விவகாரங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் பலரின் வரையறையற்ற தாராளப்போக்கு, இளம் ஆடவர்களையும் குடியரசுக் கட்சியின் பக்கம் திருப்பிவிட்டது.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில், திரு டிரம்ப்பின் வெற்றியால் ஆபத்துகள் என்னென்ன என்ற அடிப்படையில் திருவாட்டி ஹாரிஸ் மேற்கொண்ட ‘மிரட்டல்’ பிரசாரம் இறுதியில் அவருக்கு உதவவில்லை. தோற்ற பிறகு, தம் ஆதரவாளர்களை உடனே சந்திக்காதது, அவர் நல்ல தலைவர் அல்ல என்பதை உலகிற்குக் காட்டியது என்பது இவ்வேளையில் மறுப்பதற்கில்லை.

நூற்றாண்டு வரலாற்றை மாற்றியமைத்த டிரம்ப்

- இளவரசி ஸ்டீஃபன்

டுவிட்டர் தளம் தம்மை தடைசெய்த பிறகு டோனல்ட் டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ என்ற சமூகத் தளத்தை நிறுவினார்.
டுவிட்டர் தளம் தம்மை தடைசெய்த பிறகு டோனல்ட் டிரம்ப், ‘ட்ரூத் சோஷியல்’ என்ற சமூகத் தளத்தை நிறுவினார். - படம்: ராய்ட்டர்ஸ்

டோனல்ட் டிரம்ப்! காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்ற கூற்றை மெய்ப்பித்து இன்று மீண்டும் அமெரிக்க அதிபர் எனும் பட்டத்துடன் வெள்ளை மாளிகையை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார்.

நான்கு ஆண்டுகளுக்குமுன் வேண்டாம் என்று விலகி நிற்கச் சொன்ன அமெரிக்க மக்கள், இன்று மீண்டும் அதிபர் வேலையை அவர்களாகவே டிரம்பிற்கு கொடுத்து, அவருக்கு அமோக வரவேற்பை அளித்துள்ளனர்.

குற்றவாளி, சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்றெல்லாம் கூறப்பட்டவர் டிரம்ப். இனி அமெரிக்காவை ஆளவே முடியாது என்று ஒட்டுமொத்த உலகையும் நம்பவைத்த வகையில் ஊடகச் செய்திகள் இறக்கைகட்டி பறந்த நிலையில், எப்படி வென்றார் இந்த வேட்பாளர் என்ற அதிர்ச்சியிலிருந்து திருவாட்டி கமலாவின் தரப்பினர் இன்னும் மீளவே இல்லை.

தமிழக அரசியலை அணுக்கமாகக் கண்காணித்துவரும் எவருக்கும் “நீங்கள் செய்வீர்களா?” என்ற இந்த வாக்கியம் மிகவும் பரிட்சயம். அமரர் ஜெயலலிதா மக்களை நோக்கி அதேபோல் ஒரு கேள்வியைத்தான் முன்வைத்தார். விளைவாக மாபெரும் வெற்றியையும் வசப்படுத்தினார். இதுபோன்றதொரு கேள்வியை அமெரிக்க மக்களை நோக்கி இம்முறை கேட்டார் டிரம்ப்.

“முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட இப்போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?” என்று அவர் தொடுத்த கேள்வி அமெரிக்க வாக்காளர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

திருவாட்டி கமலா ஹாரிஸ், பெண்கள் உரிமை, குடிநுழைவு விவகாரம் எனப் பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்போவதாக முன்மொழிய, தனிநபர் பிரச்சினைகளைப் பற்றிப் பேச தலைவர் வரமாட்டாரா என ஏக்கப்பெருமூச்சுடன் காத்திருந்த அமெரிக்க மக்களுக்கு டிரம்ப்பின் பிரசார வாக்குறுதிகள் நம்பிக்கை விதைகளை அள்ளித் தூவின.

உணவு, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, மருத்துவச் செலவினங்கள் என ஒவ்வொன்றிற்கும் அரசாங்க உதவி, மானியங்கள், பற்றுச்சீட்டுகள் ஆதரவுடன் வாழ்க்கையைக் நகர்த்திக்கொண்டிருக்கும் அமெரிக்க மக்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற விளக்கை ஏற்றிவைக்க முன்வரும் டிரம்ப்பின் பிரசாரம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.

போர், பருவநிலை மாற்றம், மனித உரிமை என உலகப் பிரச்சினைகளுக்கு இரண்டாம் இடத்தையும் அமெரிக்கர்கள், வேலைவாய்ப்பு, பொருளியல் முன்னேற்றம் என உள்ளூர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையையும் அளித்த டிரம்ப்பின்மீது மக்கள் பார்வை முழுவதும் பதியத் தொடங்கியது.

செய்தியாளர் சந்திப்பில் மது அருந்தியது, எதிரணிமீது குறைகளை மட்டுமே கூறிவந்தது சறுக்கலை அதிகமாக்கின. துணை அதிபராக இருந்த ஆண்டுகளில் பெரிதாக ஜொலிக்காமல், இதுவரை ஏதும் செய்யாமல் இனிமேல் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எல்லாவற்றையும் மாற்றுவோம் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்வைத்த வாதத்தை அரசியல் பாசாங்காகப் பார்க்கத் தொடங்கினர் அமெரிக்க வாக்காளர்கள்.

நாட்டின் எளியோர், வறியோர் அடிப்படைத் தேவைகளுக்காகத் தள்ளாடும் வேளையில், அயல்நாட்டுப் போருக்கு நிதியை வாரி வழங்கிவரும் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கைகள், புலம்பெயர்ந்தோர் வரவைக் கட்டுப்படுத்தத் தவறிய செயல் ஆகியவை திருவாட்டி கமலாவுக்கு ஆதரவு அலையை ஏற்படுத்தாமல் செய்துவிட்டன.

அமெரிக்க நலனுக்கே முன்னுரிமை என்ற குடியரசுக் கட்சி வேட்பாளரின் முழக்கம் நாட்டில் தேசிய உணர்வைத் தட்டியெழுப்பிவிட, கூடவே டெஸ்லா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரியும் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தைத் தோற்றுவித்தவருமான எலன் மஸ்கின் பேராதரவுடன் இறுதிக்கட்டத்தில் அரங்கேறிய பல்வேறு வலையொளிகள் இளையர்களின் வாக்குகளை டிரம்ப்பிற்கு வாரிக்கொண்டு வந்துசேர்த்தன.

ஒருபுறம் ஒட்டுமொத்த ஹாலிவுட் பிரபலங்களும் தங்களின் ஆதரவை திருவாட்டி கமலாவுக்கு அளிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

மறுபுறம், செலவைச் சமாளிக்க முடியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், பழைமைவாதிகள், யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருந்தவர்கள், திருவாட்டி கமலாவின் முற்போக்கான வாக்குறுதிகளை ஏற்க மறுத்த மூத்தோர் உள்ளிட்டவர்கள் தங்களின் ஆதரவை டிரம்ப்பிற்கு அளிக்க முன்வந்தனர்.

தங்கள் எதிர்காலத்தை மாற்ற வலுவான கொள்கைகள் தேவை; அதை நிகழ்த்திக் காட்ட மாற்றம் அவசியம்; அந்த மாற்றத்திற்கான திறவுகோல் டிரம்ப்பிடமே உள்ளதாக அவர்கள் கருதத் தொடங்கினர்.

இதன் விளைவு, 132 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து வெற்றிபெறாமல் இடைவெளிவிட்டு வெற்றிபெற்ற இரண்டாவது நபர் என்று வரலாறு படைத்துள்ளார் டிரம்ப். இதற்கு முன்பு குரோவர் கிளீவ்லேண்ட் இந்தச் சாதனையை படைத்திருந்தார். அவர் அமெரிக்காவின் 22 மற்றும் 24வது அதிபராகப் பதவி வகித்தார். அந்தச் சாதனையை முறியடித்துள்ளார், டிரம்ப்.

மக்கள் ஆதரவு, வாக்காளர் குழுவின் வாக்குகள், மேல்சபை, கீழ்சபை என்று மொத்த நாடாளுமன்றத்தையும் குடியரசுக் கட்சியின் கோட்டையாக மாற்றியுள்ள டிரம்ப், அனைத்துலக ஆதரவையும் வெல்வாரா? அனைத்துலகச் சூழலை அமைதியை நோக்கி நகர்த்துவாரா? முன்மொழிந்த வாக்குறுதிகள் காற்றில் கலந்துவிடுமா அல்லது மக்களின் வாழ்வை மாற்றியமைக்குமா? என்பதை ஊரார் போல நாமும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்