தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
‘அமைதிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்’

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சத் திட்டத்திற்கு அமெரிக்கா, இஸ்‌ரேல் இணக்கம்

2 mins read
c142b19b-5dce-4044-8f07-49539d1f72fa
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் கைகுலுக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வாஷிங்டன்: காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட 20 அம்சத் திட்டம் தொடர்பில் தாங்கள் இணக்கம் கண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பின் நேரடி ஈடுபாடு இல்லாமல் அமைதிக்கான வாய்ப்புகள் தெளிவாகத் தெரியாவிடிலும், அவர்கள் இதனை ‘அமைதிக்கான வரலாற்று நாள்’ என்று குறிப்பிட்டனர்.

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) திரு நெட்டன்யாகுவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு டிரம்ப், இந்தக் கட்டமைப்பிற்கு மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடைய தலைவர்களின் ஆதரவு உள்ளது என்றும் அப்பகுதியில் அமைதி நிலவுவதற்கு இது அடித்தளம் அமைக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

ஆயினும், காஸாவின் எதிர்காலத்தில் ஹமாசுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று கட்டளையிடும் இந்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

“ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தால் அதை அழிப்பதற்கு திரு நெட்டன்யாகுவுக்கு எங்கள் முழு ஆதரவும் கிடைக்கும்,” என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.

இஸ்ரேலும் ஹமாசும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், ஈராண்டுகால காஸா போர் உடனடியாக முடிவுக்கு வரும். மேலும், அனைத்துப் பிணைக் கைதிகளும் இறந்தவர்களின் உடல்களும் 72 மணி நேரத்திற்குள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் கிட்டத்தட்ட 2,000 கைதிகளை விடுவிக்கும் என்றும் காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவோ இணைத்துக்கொள்ளவோ கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா குடியிருப்பாளர்களை அங்கேயே இருக்க ஊக்குவிக்கும் இந்த முன்மொழிவு, உடனடி உதவி மீண்டும் தொடங்கப்படுவதற்கு உறுதியளிக்கிறது. மேலும், காஸாவைப் பொருளியல் வளர்ச்சியுடன் மறுசீரமைக்கவும் புத்துயிர் அளிக்கவும் ஒரு நிபுணர்கள் குழு கூட்டப்படும் என்று இந்த முன்மொழிவு கூறுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு நெட்டன்யாகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திரு டிரம்ப்பின் திட்டத்தை தாம் ஆதரிப்பதாகவும் இது ‘எங்கள் போரின் இலக்குகளை அடைய உதவுகிறது’ என்றும் கூறினார்.

காஸாவை ஆட்சி செய்வதில் தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தப் பங்கும் கொண்டிருக்கப் போவதில்லை என்பதை ஹமாஸ் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இந்தத் திட்டம் அறைகூவல் விடுக்கிறது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் திட்டம், மத்திய கிழக்கில் அமைதிக்கு அடித்தளம் அமைப்பதாக திரு டிரம்ப் குறிப்பிட்டார். இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்க அதிக அரபு வளைகுடா நாடுகளை இணங்க வைக்க தாம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். அரபு, முஸ்லிம் நாடுகள் முன்னேற முற்றிலும் தயாராக உள்ளன என்றும் திரு டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்