வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தித் துறையில் இந்தியாவும் சீனாவும் முதலீடு செய்ய முன்வரும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழைப்புவிடுத்துள்ளார்.
மாராலாகோவிற்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் செய்துகொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் பேசினார்.
வெனிசுவேலா எண்ணெயைக் கொள்முதல் செய்வது தொடர்பில் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்ய அமெரிக்க முற்பட்டுள்ளது. “இந்தியா ஈரானிற்குப் பதிலாக வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெயை வாங்கவிருக்கிறது. அதுகுறித்த ஒப்பந்தத்தைச் செய்துவிட்டோம்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
இவ்வாரத் தொடக்கத்தில் வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர், நாட்டின் தேசிய எண்ணெய் கொள்கையில் வரலாற்றுபூர்வ மாற்றங்களைச் செய்தார்.
எண்ணெய்க்கான வரிகள் குறைக்கப்படுவதுடன் வெனிசுவேலா எண்ணெய் நிறுவனங்கள்மீது வெளிநாடுகளுக்கு அதிக உரிமை வழங்கப்படும் என்றும் கொள்கை மாற்றங்கள் குறிப்பிட்டன.
அதைத் தொடர்ந்து வெனிசுவேலா எண்ணெயை ஏற்றுமதி செய்வதுடன், அவற்றை விற்கவும் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கவும் வகைசெய்யும் உரிமத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியமைச்சு வழங்கியது.
அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் வெனிசுவேலா எரிசக்தி விநியோகத்தைக் கட்டுப்படுத்திய ஓராண்டுக்குள் வெனிசுவேலாவிலிருந்து அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப $100 பில்லியன் டாலரை முதலீடு செய்யவேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கியூபாவுடன் உடன்பாடு ஒன்றை அமெரிக்கா செய்துமுடிக்கும் என்று நம்புவதாகத் திரு டிரம்ப் கூறினார்.
கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள்மீது வரிகளை அதிகரிக்கப்போவதாக மிரட்டல் விடுத்து ஒரு நாள் ஆகியுள்ள நிலையில் திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.
அமெரிக்காவுடன் சமரசம் பேச வரும்படி திரு டிரம்ப் கியூபாவுக்கு மீண்டும் அழைப்புவிடுத்தார்.
கியூபா பெரும்பாலும் அமெரிக்காவிடம் வந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்ற அவர், கியூபாவில் நிலைமை மோசமாக உள்ளது என்றும் அங்குப் பணமும் இல்லை எண்ணெய்யும் இல்லை என்றும் கூறினார்.

