வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய இந்திய-அமெரிக்க உறுப்பினர்கள், தொழில்முனைவர்கள், மைக்ரோன் டெக்னாலஜி நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அதிபர் அலுவலகத்தில் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற அக்கொண்டாட்டத்தில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினெய் மோகன் குவாத்ரா, பிரபலச் சமையற்கலைஞர் விகாஸ் கண்ணா, தொழில்முனைவர் விஷால் கோண்டல், ஐபிஎம் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, ‘எஃப்பிஐ’ இயக்குநர் காஷ் பட்டேல், அமெரிக்கத் தேசிய சுகாதார நிலையங்களின் இயக்குநர் ஜே பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தின் துணை ஆணையர் அர்ஜுன் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நெருக்கமான கூட்டத்தின்போது, டிரம்ப் ஐந்துமுகக் குத்துவிளக்கு ஒன்றை ஏற்றினார்.
கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட தொழில்முனைவர் கோண்டல், விளக்குகள் ஏற்றப்பட்ட வேளையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு நீடிக்கவும் இருளை வென்று ஒளி வெற்றி பெறவும் தாம் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் தீபாவளியைக் கொண்டாடும் பாரம்பரியத்தை, 2003ஆம் ஆண்டில் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முதன்முதலில் தொடங்கிவைத்தார்.
