நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கை, பொருளியல் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க அது உதவும் என்றார் திரு டிரம்ப்.
“அமெரிக்கா-சீனா உறவு மிக முக்கியமான ஒன்று, நான் கட்டாயம் சீனா செல்லத் திட்டமிடுவேன்,” என்று அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை (மே 16) ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான நேர்காணலில் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு டிரம்ப் அண்மைக் காலமாகச் சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனிடையே, இவ்வாரத் தொடக்கத்தில் சீன அதிபர் ஸியுடன் தொலைபேசியில் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சில நாள்களுக்கு முன்னர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீடித்து வந்த வர்த்தக பதற்றம் சற்று தணிந்தது. இரு நாடுகளும் ஒன்றின்மீது ஒன்று விதித்த அடிப்படை வரிகளைக் குறைத்தன.
மேலும் திரு டிரம்ப், சீன இறக்குமதிகளுக்கான கூடுதல் வரிகளை அடுத்த 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
அவரது அந்த அறிவிப்பு உற்பத்தித் துறைக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த 90 நாள்களில் அமெரிக்காவின் சீனப் பொருள் இறக்குமதிக்கான வரி 145 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டுக்குக் குறைக்கப்படும்.
அதேபோல், அமெரிக்காவின் பொருள்களுக்குச் சீனாவில் 10 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்படும்.
சீனாவுடன் நட்பை விரும்பினாலும் அதிபர் டிரம்ப் அதன் ஆதிக்கத்தை வளரவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதையும் உறுதி செய்து வருகிறார்.
தற்போது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, கத்தார் ஆகிய நாடுகளுக்குத் தமது முதல் அரசதந்திரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் திரு டிரம்ப்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்க ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதிலும் சீனாவின் நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்பதிலும் அதிபர் டிரம்ப் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதுபற்றி அவர் தமது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
“சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் மற்றும் கத்தாருக்கு சீனா பல உதவிகள் செய்துள்ளன.
“ஏதேனும் பிரச்சினை என்றால் அந்த மூன்று நாடுகளும் சீனாவைத்தான் அணுகுவார்கள்.
“ஆனால், இனி அப்படி நடக்காது,” என்று திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று நாடுகளும் அமெரிக்காவுக்கு முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.