ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரு தலைவர்களும் திங்கட்கிழமை (டிசம்பர் 29) அமெரிக்காவில் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது காஸாவில் சண்டை நிறுத்த உடன்பாடு அமலில் உள்ளது. காஸாவை மேம்படுத்த என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
பாலஸ்தீனத்தில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கவும் அனைத்துலக பாதுகாப்புப் படையைப் பணியமர்த்துவதிலும் அமெரிக்கா அதிக ஈடுபாடுகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது திரு நெட்டன்யாகு லெபனான், ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்னர் அதிபர் டிரம்ப்பைச் சந்திக்கப்போவதாகத் திரு நெட்டன்யாகு கூறியிருந்தார். இருப்பினும், வெள்ளை மாளிகை இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியிடவில்லை.
திரு நெட்டன்யாகு அதிபர் டிரம்ப்பை மார்-ஆ-லாகோ (Mar-a-Lago) கடற்கரை உல்லாசத் தலத்தில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
காஸாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா முழுவீச்சில் சமரச வேலைகளைப் பார்த்தது. அதன் பலனாகக் கடந்த அக்டோபர் மாதம் காஸாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
“காஸாவில் அமைதி நிலைக்க வேண்டும் என்பது அதிபர் டிரம்ப்பின் விருப்பம். அதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
காஸாவில் சண்டை நிறுத்த உடன்பாடு அமலில் இருந்தாலும் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் வெடிக்கின்றன.
இருதரப்பும் ஒன்றை ஒன்று மாறிமாறி குறைகூறிவருகின்றன. இதனால் இரண்டாம் கட்ட சண்டை நிறுத்த உடன்பாட்டைச் செயல்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறுகிறது.

