வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸா அமைதிக்கான திட்டம் கிட்டத்தட்ட முடிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் அமைதிக்கான திட்டம்குறித்து தாம் திங்கட்கிழமை பேசவுள்ளதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார்.
“காஸா அமைதிக்காக இஸ்ரேலிடமும் அரபு தலைவர்களிடமும் பேசினேன், அனைத்துத் தரப்பும் அமைதியை நிலைநிறுத்த ஒத்துழைத்துள்ளனர். இது நல்ல முன்னேற்றம்,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைதித் திட்டம் குறித்து அதிபர் டிரம்ப்போ அரபுத் தலைவர்களோ தங்களிடம் எந்த விவரமும் கொடுக்கவில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் அமைதிக்கான நடவடிக்கை எடுத்துவரும் நேரத்திலும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. காஸா நகருக்குள் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பிணைக் கைதிக்ளிடம் தொடர்பு இல்லாமல் போனதாக அறிவித்துள்ளது.
“இஸ்ரேல் அதன் ராணுவ நடவடிக்கைகளைக் காஸா நகரில் நிறுத்த வேண்டும், அதன் துருப்புகளைப் பின்வாங்க உத்தரவிட வேண்டும், ஆகாய வழித் தாக்குதல்களை 24 மணி நேரத்திற்கு நிறுத்த வேண்டும். அப்போதுதான் பிணைக் கைதிகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள முடியும்,” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் இந்தக் கோரிக்கை அதிபர் டிரம்ப் மற்றும் நெட்டன்யாகு இடையிலான சந்திப்பில் முக்கிய அம்சமாகப் பேசப்படும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புதிய அமைதி வரைவில், ஹமாஸ் அதனிடம் உள்ள 48 பிணைக் கைதிகளையும் 48 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும். அதன் பின்னர் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாகக் காஸாவைவிட்டு வெளியேறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக புளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அமைதி வரைவில் பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்க்படுவார்கள், அதிகமான மனிதநேய உதவிகள் காஸாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் ஹமாஸ் அதன் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை ஆட்சி செய்யக்கூடாது. புதிதாக உருவாக்கப்படும் அரசாங்கத்திற்கு வழிவிட வேண்டும் என்று வரைவில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
புதிய அமைதி வரைவு குறித்து இஸ்ரேல் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

