அமெரிக்க-பிரிட்டன் நல்லுறவை மெச்சிய டிரம்ப்

2 mins read
470f5dd2-9856-4c42-bff9-80e39935e257
(இடமிருந்து) பிரிட்டன் அரசியார் கமிலா, மன்னர் சார்ல்ஸ், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்கத் தலைமகள் மெலனியா டிரம்ப் ஆகியோர் செப்டம்பர் 17ஆம் தேதி விண்ட்சர் அரண்மனையில் நடைபெற்ற அரசு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமது நாட்டுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் நிலவும் சிறந்த உறவைப் பாராட்டியிருக்கிறார்.

அதிபர் என்ற முறையில் அந்நாட்டுக்கு இரண்டாம் முறையாகச் சென்றுள்ள அவர், பிரிட்டி‌‌ஷ் மன்னர் சார்ல்சுக்குப் புகழாரம் சூட்டினார்.

வாழ்வில் தமக்குக் கிடைத்த பெருமைகளில் இதுவும் ஒன்று என்றார் திரு டிரம்ப்.

பிரிட்டனின் முழு அரசுபூர்வ மரியாதையுடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பு அமெரிக்க அதிபருக்கும் அவரின் துணைவியார் மெலனியா டிரம்ப்புக்கும் புதன்கிழமை (செப்டம்பர் 17) நல்கப்பட்டது.

“அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பந்தம் விலைமதிப்பற்றது, என்றென்றும் நிலைத்திருக்கக்கூடியது. அது மாற்ற முடியாதது, பிளவு ஏற்படுத்த முடியாதது,” என்றார் திரு டிரம்ப். விண்ட்சர் அரண்மனையில் அளிக்கப்பட்ட அரசு விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

திரு டிரம்ப்பின் பயணம் பொருளியல் உறவை வலுப்படுத்த உதவும் என்று நம்புகிறார் பிரிட்டி‌‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர்.

அமெரிக்கா பில்லியன் கணக்கான டாலரை முதலீடு செய்யும் என்றும் தீர்வைகளைத் தளர்த்தும் என்றும் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

உக்ரேனிய, இஸ்ரேலிய விவகாரங்களிலும் அமெரிக்காவை நெருக்குவதற்குத் திரு ஸ்டார்மர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட், என்விடியா, கூகல், ஓப்பன்ஏஐ உள்ளிட்ட நிறுவனங்கள் பிரிட்டனில் $54 பில்லியன் முதலீடு செய்ய எண்ணியிருக்கின்றன. முக்கியமாகச் செயற்கைத் தொழில்நுட்பம், குவான்ட்டம் கணினியியல், குடிமை அணுசக்தி முதலிய துறைகளில் சேர்ந்து பணியாற்ற அவை திட்டமிட்டுள்ளன.

“உங்கள் நிர்வாகத்தின் முதல் வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டது பிரிட்டன். அது இரு நாடுகளுக்கும் வேலைகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுவந்தது,” என்று மன்னர் அவரின் உரையில் குறிப்பிட்டார்.

இருப்பினும் திரு டிரம்ப் பிரிட்டனில் அவ்வளவு பிரபலமாக இல்லை என்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

லண்டனின் விண்ட்சர் அரண்மனை வட்டாரத்தில் திரு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஏராளமாக இருந்தபோதிலும் அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்